புதுடெல்லி: பாலியல் குற்றங்களை தடுக்க விரைவு சிறப்பு நீதிமன்றம் கோரி பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுதிய கடிதம் உண்மைக்குப் புறம்பானது என்று மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது.
மேற்கு வங்கம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவரின் படுகொலை பேரதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி இரண்டு கடிதங்கள் எழுதினார். முதல் கடிதத்தில், பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை போன்ற கொடூரகுற்றங்களை தடுக்க கடுமையான சட்டம் வேண்டும் என்றும் குற்றம் இழைக்க நினைப்பவர்களை அச்சுறுத்தும் வகையில் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் எழுதிய இரண்டாவது கடிதத்தில், வழக்குகளைக் குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து வைக்க, விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்நிலையில், மம்தா எழுதிய 2-வது கடிதத்துக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி பதிலளித்துள்ளார். மத்திய அமைச்சர் கூறியதாவது:
கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின்படி மேற்கு வங்கத்தில் 88 விரைவுநீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை மத்திய அரசு திட்டத்துக்கு உட்பட்ட விரைவு சிறப்புநீதிமன்றங்கள் அல்ல. மேற்கு வங்கத்தில் ஏற்கெனவே 48,600 பாலியல்குற்றங்கள் மற்றும் போக்சோ தொடர்பான வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
இந்த சூழலில் கூடுதலாக 11 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் இன்னும் அமைக்கப்படாமல் உள்ளன. இந்த 11 விரைவு சிறப்பு நீதிமன்றங்களை பிரத்தியேக போக்சோ நீதிமன்றங்களாகச் செயல்படுத்தலாம் அல்லது பாலியல் வன்கொடுமைகள் மற்றும்போக்சோ வழக்காடு மன்றங்களாகவும் மாற்றலாம். இதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது.
ஆகவே, உங்கள் (மம்தா) கடிதத்தில் குறிப்பிடப்பட்டவை உண்மைக்குப் புறம்பானவை. விரைவு சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதில் ஏற்பட்ட காலதாமதத்தை மறைக்கும் வகையில் எழுதப்பட்டிருப்பது தெரியவருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவு: பெண்களை பாதுகாக்கும் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்ட பிறகும்அவற்றை நிலைநாட்ட ஏன் கடுமையான விதிகள் மற்றும் ஒழுங்குமுறையை மேற்கு வங்க அரசு நிலைநாட்டவில்லை என்பதை விளக்கும்பொறுப்பு மம்தாவுக்கு உள்ளது.கடிதங்கள் எழுதுவதை நிறுத்துங்கள். இந்த கேள்விகளுக்கு பதில்சொல்லவேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.