போதிய ஆவணங்கள் இல்லாமல் பொதுநல வழக்கு தாக்கல் செய்தால்?: மதுரை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை


மதுரை உயர் நீதிமன்றம்

போதுமான ஆவணங்கள் இல்லாமல் பொதுநல மனு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை கூனியூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுந்தரவேல், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அதில், நெல்லை மாவட்டம் களக்காடு நவநீதகிருஷ்ணன் கோயில் தெப்பக்குளம், சேரன்மகாதேவி ரயில் நிலையம், கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையம் முதல் கன்னடியன் கால்வாய் பாலம் வரை மற்றும் அம்பாசமுத்திரம் வளைவு முதல் அம்பாசமுத்திரம் ரயில்வே கேட் வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், டி.பரத சக்கரவர்த்தி அமர்வு முன் வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், பொது நல மனுக்களை விளம்பரத்திற்காக தாக்கல் செய்யக்கூடாது. பொதுநல மனுக்கள் தாக்கல் செய்வதற்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை தொடர்பாக மனு அளிக்க வேண்டும்.

அவர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தேவையான ஆதாரங்கள், புள்ளி விவரங்களுடன் பொதுநல மனு தாக்கல் செய்யலாம். போதிய ஆவணங்கள் இல்லாமல் பொதுவான கோரிக்கைகளை முன்வைத்து பொதுநல வழக்கு தாக்கல் செய்தால் அபராதம் விதிக்கப்படும். இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

x