கைது நடவடிக்கைக்கு பயந்து, இரவு முழுவதும் கட்சி அலுவலகத்தில் தங்கிய காங்கிரஸ் தலைவர்!


கட்சி அலுவலகத்தில் தூங்கிய ஒய்.எஸ்.ஷர்மிளா

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி அரசின் கைது நடவடிக்கைக்கு அஞ்சி அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா, கட்சி அலுவலகத்திலேயே நேற்று முழுவதும் தங்கியுள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் வேலையில்லாத இளைஞர்கள், மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மாநில அரசு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி, காங்கிரஸ் தொண்டர்கள், தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் அலுவலகம் முன் குவிக்கப்பட்டுள்ள போலீஸார்

இந்நிலையில் விஜயவாடாவில் உள்ள ஆந்திர ரத்னா பவனில் செய்தியாளர்களை சந்தித்த, மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ். ஷர்மிளா கூறுகையில், "முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 5 ஆண்டுகளில் இளைஞர்கள், வேலையில்லாதவர்கள் மற்றும் மாணவர்களின் முக்கியமான பிரச்சினைகளை தீர்ப்பதில் முற்றிலும் தோல்வியடைந்துவிட்டார்” என கூறினார்.

இதேபோல் எக்ஸ் வலைதளத்தில் ஒய்.எஸ்.ஷர்மிளா வெளியிட்டுள்ள பதிவில், “வேலையில்லாதவர்களுக்காக நாங்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தால், எங்களை வீட்டுக் காவலில் வைக்க முயற்சிப்பீர்களா? ஜனநாயகத்தில் போராட்டம் நடத்த எங்களுக்கு உரிமை இல்லையா?போலீஸாரின் வீட்டுக் காவல் நடவடிக்கையை தவிர்ப்பதற்காக ஒரு பெண், காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இரவை கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது வெட்கக்கேடாக இல்லையா?

நாங்கள் பயங்கரவாதிகளா? அல்லது சமூக விரோத சக்திகளா? அவர்கள் (அரசு) எங்களை தடுக்க முயற்சிக்கிறது. எங்களைப் பார்த்து அவர்கள் (அரசு) பயப்படுகிறார்கள் என்பதே இதற்கு அர்த்தம். தங்கள் திறமையின்மை, உண்மையை மறைக்க முயற்சிக்கின்றனர். அவர்களால் எங்களைத் தடுக்க முடியும், எங்கள் தொண்டர்களை தடுக்க முடியும், ஆனால், வேலையில்லாதவர்களுக்கான எங்களின் போராட்டத்தை தடுக்க முடியாது.

ஆயிரக்கணக்கான போலீஸார் எங்களைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளனர். இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. நாங்கள் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளோம். நாங்கள் வேலையில்லாதவர்களின் பக்கம் நின்றால், அரசு எங்களை கைது செய்கிறது. நீங்கள் எங்களை தடுக்க முயற்சிக்கும் சர்வாதிகாரிகள். உங்கள் செயல்பாடுகளே இதற்கு சான்று. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு, வேலையில்லாதவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

x