உத்தராகண்ட் | ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து


புதுடெல்லி: உத்தராகண்ட்டின் கேதர்நாத்திலிருந்து கோச்சருக்கு விமானப் படையின் எம்ஐ -17 விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று சனிக்கிழமை நடுவானில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

தனியார் நிறுவனம் ஒன்றால் இயக்கப்பட்ட அந்த ஹெலிகாப்டர், லிஞ்சோலியில் மந்தாகினி நதிக்கு அருகில் விழுந்து நொறுங்கியது. கேமிராவில் பதிவான இந்த விபத்தினால் யாரும் காயமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்டத்தின் சுற்றுலா அதிகாரி ராகுல் சவுபே கூறுகையில், "சனிக்கிழமை காலையில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான எம்ஐ - 17 ஹெலிகாப்டர், பழுதான ஹெலிகாப்டர் ஒன்றை கவுஞ்சர்க்கு எடுத்துச் சென்றது. என்றாலும் காற்றின் அழுத்தம் மற்றும் சிறிய ஹெலிகாப்டரின் எடை காரணமாக எம்ஐ 17 நிலைதடுமாறத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து தாரு முகாம் அருகே இந்திய விமான படையின் விமானி, ஹெலிகாப்டரை கீழே கழட்டி விட முடிவு செய்தார். உடனடியாக ஆள்நடமாட்டம் இல்லாத பள்ளதாக்குப் பகுதியில் ஹெலிகாப்டரை கீழே விழச்செய்தார். விபத்து நடந்த இடத்தில் மீட்புக்குழுவினர் நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர். உயிரிழப்புகள், காயமடைந்தோர் பற்றி வதந்திகளைப் பரப்ப வேண்டாம்" என்று அவர் தெரிவித்தார்.

விபத்துக் குறித்து அதிகாரிகள் கூறுகையில், "கேதர்நாத்தின் ஹெலிபேடில் இருந்து கோச்சார் ஹெலிபேடுக்கு மற்றொரு ஹெலிகாப்டர் மூலமாக எடுத்துச் செல்லப்பட்ட தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான பழுதான ஹெலிகாப்டர் ஒன்று தாரு முகாமுக்கு அருகே லிஞ்சோலிக்கு அருகே ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதாக, மாநில பேரிடர் மீட்பு நிதிக் குழு (SDRF) லிஞ்சோலி போலீஸிடம் இருந்து செய்தி வந்தது. உடனடியாக எஸ்டிஆர்எஃப் குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தினால் உயிரிழப்புகள் எதுவும் நிகழவில்லை" என்று தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் முன்பு யாத்திரிகர்களை கேதர்நாத் கோயிலுக்கு அழைத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டிருந்தது. முன்னதாக விபத்துக்குள்ளான விமானம் கடந்த மே 24ம் தேதி கேதர்நாத் ஹெலிபேடிலிந்து கோயிலுக்கு ஏழு யாத்திரிகர்களை அழைத்துச் சென்றது.

ஹெலிபேடில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்திலேயே தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் நிலைதடுமாறியது. ஹெலிகாப்டர் விமானியின் உடனடி நடவடிக்கையால் அது ஹெலிபேட் அருகே அவசரமாக தரையிறக்கப்பட்டு 7 யாத்திரிகர்களின் உயிர்கள் காக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சமீப மாநிலங்களில் சார் தம் யாத்திரை காரணமாக உத்தராகண்ட் முன்னெப்போதும் இல்லாத அளவில் யாத்திரிகர்களை கண்டது. இந்தாண்டு யாத்திரை மே 10ம் தேதி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

x