வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசால் விதிக்கப்பட்டிருந்த தடை மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயைக் கடந்தது. சின்ன வெங்காயத்தின் விலை சில இடங்களில் 200 ரூபாயைத் தாண்டியது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த கடும் விலை உயர்வை தொடர்ந்து மத்திய அரசு, தனது கையிருப்பில் உள்ள வெங்காயத்தை விடுவித்ததோடு, வெங்காயத்தை ஏற்றுமதி செய்வதற்கு கடந்தாண்டு டிசம்பர் 8ம் தேதி முதல் தடை விதித்தது. மேலும் நுகர்வோருக்கு உதவும் வகையில், சில்லறை சந்தையில் கிலோவுக்கு ரூ.25 என்ற மானிய விலையில் வெங்காய விற்பனையை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
அதன் பிறகு வெங்காயத்தின் விலை குறைந்து தற்போது கிலோ 20 ரூபாய் என்கிற அளவில் விற்கப்படுகிறது. இந்நிலையில் வடமாநிலங்களில் கடும் குளிர் காரணமாக வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் வெங்காயம் விலை மீண்டும் உயரலாம் என்று மத்திய அரசு கருதுகிறது.
அதைத்தொடர்ந்து நாட்டிற்குள் வெங்காயத் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவும், விலை ஏற்றத்தை கட்டுக்குள் வைத்திருப்பதற்காகவும் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதி தடையை மார்ச் 31, 2024 வரை நீட்டித்துள்ளது.
டிசம்பர் 8, 2023 முதல் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தடையை மார்ச் 31, 2024 வரை நீட்டித்துள்ளதாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வெங்காயம் விலை உயராமல் ஒரே சீரான விலையில் கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று கருதப்படுகிறது.