மன்னிப்புக் கேட்ட மோடி முதல் பாராலிம்பிக்ஸில் இந்தியா அசத்தல் வரை: டாப் 10 விரைவுச் செய்திகள் 


மன்னிப்புக் கேட்ட பிரதமர் மோடி: சத்ரபதி சிவாஜி சிலை உடைந்ததற்காக மன்னிப்புக் கோருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் பால்கரில், வத்வான் துறைமுகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது அவர், "சிந்துதுர்க்கில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலை உடைந்ததற்காக மன்னிப்பு கோருகிறேன். எனக்கும், எனது சகாக்களுக்கும், எல்லோருக்கும் சிவாஜி மகாராஜ் ஓர் அரசர் மட்டுமல்ல, அவர் மரியாதைக்குரியவர். சத்ரபதி சிவாஜியை கடவுளாக வணங்கும் அனைவரின் உணர்வுகளையும் புண்படுத்தியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய ‘பண்பு’ முற்றிலும் வேறுபட்டது. எங்களைப் பொறுத்தவரை, எங்கள் வணக்கத்துக்குரிய தெய்வத்தை விட எதுவும் பெரியது அல்ல" என்று தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த ஆண்டு கடற்படை தினத்தன்று திறந்து வைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி சிலை திங்கள்கிழமை மதியம் 1 மணியளவில் இடிந்து விழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிலை கட்டமைப்பு ஆலோசகர் சேத்தன் பாட்டீல் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு பரபரப்பு கடிதம்: “தமிழக அரசு ஏற்கெனவே ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், பிஎம் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலினுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் எழுதிய பதில் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இதன்மூலம், தமிழக பள்ளிக் கல்வித் துறையில் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளின் வளர்ச்சிப் பணிகள் சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதியுதவி பெறுவதில் சிக்கல் நீடித்துள்ளது.

மாணவியிடம் அத்துமீறல்: திருச்சி என்ஐடியில் போராட்டம்: திருச்சி என்ஐடி கல்லூரி விடுதியில் மாணவி ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற ஒப்பந்த பணியாளரை கண்டித்தும், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்திய என்ஐடி நிர்வாகத்தை கண்டித்தும், விடுதி வார்டனை சஸ்பெண்ட் செய்யக் கோரியும் திருச்சி என்ஐடி வளாகத்தில் வியாழக்கிழமை இரவில் இருந்து மாணவ - மாணவியர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை கல்லூரிக்கு நேரில் சென்ற காவல் துறை கண்காணிப்பாளர் மாணவர்கள் சமாதானப்படுத்தி போராட்டத்தை வாபஸ் பெறவைத்தார்.

இதனிடையே, பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் விரைந்து வந்த மாணவியின் தந்தை இச்சம்பவம் குறித்து உடனடியாக திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஒப்பந்த பணியாளர் கதிரேசன் என்பவரை கைது செய்து திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

ஹெச்.ராஜா தலைமையில் பாஜக ஒருங்கிணைப்புக் குழு: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்றுள்ள நிலையில், கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க மூத்த தலைவர் ஹெச். ராஜா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அரண் சிங் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை, இங்கிலாந்தில் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய 3 மாதங்களுக்கு கல்வி பயிற்சித் திட்டத்தில் கலந்து கொள்கிறார். மாநிலத் தலைவர் இல்லாத நிலையில், கட்சியின் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க கட்சியின் தேசியத் தலைவர் நட்டாவின் வழிகாட்டுதலின்படி குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் ஒருங்கிணைப்பாளராக தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச். ராஜா நியமிக்கப்படுகிறார். இந்த குழு, மாநில உயர்நிலைக் குழுவோடு கலந்தாலோசித்து கட்சி சார்ந்த முடிவுகளை எடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் உறுப்பினர்களாக மாநில துணைத் தலைவர் எம். சக்கரவர்த்தி, மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் எம். முருகானந்தம், மாநில பொதுச் செயலாளர் ராம. சீனிவாசன், மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து: தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும், படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மேலும் பல புதிய தொழில்களை தமிழகத்தில் உருவாக்கும் முயற்சியாகவும், முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப், இன்பிங்ஸ், அப்ளைட் மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அமெரிக்கா நாட்டின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.

பாஜகவில் இணைந்தார் சம்பாய் சோரன்: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முக்கிய தலைவராகவும், அம்மாநில முன்னாள் முதல்வராகவும் இருந்த சம்பாய் சோரன் சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகினார். இதையடுத்து, அவர் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணையும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை ராஞ்சியில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் முன்னிலையில் சம்பாய் சோரன் தனது ஆதரவாளர்களுடன் பாஜகவில் இணைந்தார்.

நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரிய தெலங்கானா முதல்வர்: டெல்லி மதுபான கொள்கை வழக்கில் தெலங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், மேலவை உறுப்பினருமான கவிதா, நிபந்தனை ஜாமினில் சமீபத்தில் வெளியே வந்தார். இதுகுறித்து தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சித்திருந்தார். இதற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், “நான் தெரிவித்ததாக பத்திரிகைகளில் வெளியான கருத்துகளுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு மம்தா மீண்டும் கடிதம்: பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைகளுக்கு எதிராக வலுவான சட்டம் வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு பதில் இல்லாதது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடித்தில் அவர், “இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த விஷயத்தில் உங்களிடமிருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. என்றாலும், மத்திய அரசின் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அமைச்சரிடமிருந்து பதில் வந்தது. எனது கடிதத்தில் கூறப்பட்டிருந்த பிரச்சினையின் தீவிரத்தை அவர் கவனிக்கவில்லை. அதுபோன்ற பொதுவானதொரு பதிலில், விஷயத்தின் தீவிரத் தன்மை மற்றும் சமூகத்தில் அதன் தொடர்பு குறித்து போதுமான கவனம் கொடுக்கப்படவில்லை என நான் கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்புக்கு கமலா ஹாரிஸ் பதிலடி! - ‘அரசியல் ஆதாயத்துக்காக கமலா ஹாரிஸ் ஆப்பிரிக்க அமெரிக்கராக மாறிவிட்டார்?’ என ட்ரம்ப் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக, “அதே பழைய மற்றும் சோர்வளிக்கும் விளையாட்டு” என கமலா ஹாரிஸ் பதிலடி தந்துள்ளார்.

ஜெயசூர்யா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு: நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரில் மலையாள நடிகர் ஜெயசூர்யா மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 48 மணி நேரத்தில் அவர் மீது 2 வழக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாராலிம்பிக்ஸில் பதக்கம் குவிக்கும் இந்தியா: பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் தொடரின் துப்பாக்கிச் சூடுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லேகரா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். மற்றொரு வீராங்கனையான மோனா இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இதன் தொடர்ச்சியாக, பாராலிம்பிக்ஸ் தொடரின் மகளிருக்கான 100 மீட்டர் T35 பிரிவு ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ப்ரீத்தி பால் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

x