காவல் துறையினர் தற்கொலைக்கு துணிவது ஏன்?


விஜயகுமார் ஐஜி

மன அழுத்தம் காரணமாக, கோவை சரக டிஐஜி-யாக இருந்த விஜயகுமார் தன்னைக் தானே சுட்டுக்கொண்டு தன்னுயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெருத்த சோகத்தை படரவிட்டிருக்கிறது. இறுக்கத்துடன் பணியாற்றும் காவல் துறையினர் எத்தகையை மன அழுத்தத்துடன் தங்களின் பணியைத் தொடர்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் படம்பிடித்துக் காட்டி இருக்கிறது.

காவல் துறை உங்களின் நண்பன் என்கிறோம். அப்படிப்பட்ட நண்பர்கள் தற்கொலைக்கு துணியுமளவுக்கு போகக் காரணமென்ன... அவர்களை அந்த இடத்தை நோக்கி தள்ளும் காரணி எது என்ற கேள்விகளுடன் காவல் துறை நண்பர்கள் சிலரிடம் பேசினோம்.

“முறையான முழுமையான பயிற்சி இல்லாததால் பணியில் ஏற்படும் நெருக்கடிகள், பணிச்சுமை, ஓய்வில்லா பணி, குடும்பத்துக்காக நேரம் ஒதுக்கமுடியாத சூழல், சரியான தூக்கமின்மை - இப்படித்தான் காவல்துறையினர் ஓடிக்கொண்டே இருக்கிறோம்” என்று சொன்ன அவர்கள் தொடர்ந்தும் பேசினார்கள்.

“சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, காவலர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு ஓராண்டு பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த பயிற்சியின் போது காவலருக்கான அடிப்படை விஷயங்கள் துவங்கி விசாரணை மேற்கொள்வது வரையிலான அனைத்தும் விரிவாகக் கற்றுத்தரப்பட்டன.

ஆனால், காலப்போக்கில் இந்த பயிற்சி காலம் 9 மாதங்களாக குறைந்தது. தற்போது 3 மாதங்கள் மட்டுமே பயிற்சி. இதனால் காவல் பணியில் உள்ள சிரமங்கள், எதிர்கொள்ள வேண்டிய சவால்கள், எந்தச் சூழலையும் சமாளிக்கும் திறன் போன்றவற்றில் முழுமையான பயிற்சி பெறாமலேயே பலரும் பணியில் சேர்கிறார்கள்.

காவலர் பயிற்சி

தமிழகத்தின் பெரும்பாலான காவல் நிலையங்களில், அவை துவங்கப்பட்ட போது அனுமதிக்கப்பட்ட காவலர் எண்ணிக்கையே இன்னமும் தொடர்கிறது. மக்கள் தொகை, போக்குவரத்து, விபத்து, குற்றச் சம்பவங்கள் போன்றவற்றின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தாலும், அனுமதிக்கப்பட்ட காவலர் பணியிடங்கள் மட்டும் அப்படியே இருக்கிறது. அதிலும் 80 சதவீத காவல் நிலையங்களில் காலிப் பணியிடங்களையும் நிரப்பாமல் காலத்தைத் தள்ளிக்கொண்டு வருகிறார்கள்.

காவலர் பயிற்சி

இதனால், பல இடங்களில் இரண்டு காவலர்கள் செய்ய வேண்டிய வேலையை ஒருவர் மட்டுமே சுமக்க வேண்டிய கட்டாயம். இதனால் காவலர்கள், உடற் சோர்வும் மனச் சோர்வும் அடைகிறார்கள். இப்படி சோர்ந்து போகும் காவலர்கள், எந்நேரமும் காவல் பணியில் இருக்க வேண்டிய சூழலுக்குள் சிக்கிக் கிடப்பதால் தங்களது கஷ்டங்களை குடும்பத்தினரிடம் கூட பகிர்ந்து ஆறுதல்பட முடியாமல் தவிக்கிறார்கள். இந்தத் தவிப்பே பல நேரங்களில் அவர்களை தற்கொலை எண்ணத்துக்குள் தள்ளிவிடுகின்றன. கடை நிலை காவலர்கள் மட்டுமல்ல... அதிகாரிகள் மட்டத்திலும் இதுதான் யதார்த்தம். காவல் துறையினருக்கு வார விடுமுறைகள் அனுமதிக்கப் பட்டிருந்தாலும் பல நேரங்களில் அந்த நேரத்திலும் அவர்கள் பணியில் இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள். இதுவும்கூட மன அழுத்தத்துக்கு முக்கிய காரணம்” என்கிறார்கள் அந்த காவல் நண்பர்கள்.

பொன்.மாணிக்கவேல் ஐஜி (ஓய்வு)

காவல் துறையினரின் மன அழுத்தத்தை போக்க என்ன தான் வழி என ஓய்வுபெற்ற ஐஜி-யான பொன்.மாணிக்கவேலிடம் கேட்டோம். ‘’தற்கொலை முடிவுக்கு செல்லும் காவலர்கள் யாரும் குழுவாக பேசி வைத்து இந்த முந்த முடிவை எடுப்பதில்லை. மன தைரியம் இல்லாதவர்கள், பய உணர்வு உள்ளவர்கள், தனிமையில் இருப்பவர்கள் போன்ற சிலரே இத்தகைய முடிவை நாடுகின்றனர். என்னைக் கேட்டால், மனதில் தைரியம் இல்லாதவர்கள் காவல் பணியை தேர்வு செய்யக்கூடாது. இன்றைய அறிவியல் வளர்ச்சியால் காவல்துறையில் முன்பு போல பணிச்சுமை இல்லை.

இருப்பினும் காவலர் பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 3 மாத பயிற்சி என்பது போதுமானதல்ல. இதனை அதிகரிக்க வேண்டும். பயிற்சி காலத்தை அதிகரிக்கும் போது அதில் ஈடுபடுபவர்களுக்கு போதுமான நம்பிக்கை, தைரியம் கிடைக்கும். போலீஸ் என்றால் பொதுமக்கள் மத்தியில் மிடுக்கான நபராகத் தெரிய வேண்டும். தேவையான எண்ணிக்கையை விட கூடுதலான நபர்களை காவலர் பணிக்குத் தேர்வு செய்து அதில், பயிற்சியை முழுமையாக முடித்தவர்களை மட்டுமே பணிக்கு அனுப்புவதும் பிரச்சினைகளைத் தீர்க்கும்” என்றார் பொன்.மாணிக்கவேல்.

ஐஜி விஜயகுமார் இறந்த சோகம் மறைவதற்குள் சென்னையில் குதிரைப் படையைச் சேர்ந்த காவலர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். காவல் பணியில் இருப்பவர்கள் இப்படி தற்கொலைக்கு துணிவதற்கான காரணங்களை முழுமையாகக் கண்டறிந்து இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க அரசு உரிய நடவடிக்கைகளை உடனே எடுத்தாக வேண்டும்.

x