மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி: சிவாஜி சிலை இடிந்த விவகாரத்தில் உருக்கம்!


பால்கர்: மகாராஷ்டிர மாநிலம் ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜி சிலை இடிந்து விழுந்த விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி இன்று மன்னிப்பு கேட்டார்.

மகாராஷ்டிர மாநிலம் பால்கரில் இன்று பேசிய பிரதமர் மோடி, "நான் இங்கு வந்திறங்கியவுடன், சிலை இடிந்து விழுந்தது தொடர்பாக சத்ரபதி சிவாஜியிடம் முதலில் மன்னிப்பு கேட்டேன். மேலும், இச்சிலை இடிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்ட மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சத்ரபதி சிவாஜி மகாராஜை தங்கள் தெய்வமாகக் கருதி, மிகவும் புண்பட்டவர்களுக்கு, நான் தலை வணங்கி அவர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். எங்களைப் பொறுத்தவரை, எங்கள் தெய்வத்தை விட பெரியது எதுவுமில்லை" என்று அவர் கூறினார்.

ராஜ்கோட் கோட்டையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடற்படை தின கொண்டாட்டத்தின் போது, பிரதமர் மோடி சத்ரபதி சிவாஜி மகாராஜ் சிலையை திறந்து வைத்தார். இந்த சிலை கடந்த திங்கள்கிழமை திடீரென முற்றிலுமாக இடிந்து விழுந்தது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது.

சிலை கட்டுமான விவகாரத்தில் ஆளும் அரசு ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாதி கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

சிலை இடிந்து விழுந்தது குறித்து விசாரிக்க இந்திய கடற்படையின் தலைமையில் மகாராஷ்டிரா அரசின் பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்ட ஒரு கூட்டு தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

x