10 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சஸ்பெண்ட்... சபாநாயகர் அதிரடி!


குஜராத் சட்டப் பேரவை கூட்டம்

குஜராத் சட்டப் பேரவையில் அமளியில் ஈடுபட்ட 10 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் சட்டப் பேரவை

குஜராத் சட்டப் பேரவையின் இன்றைய கூட்டத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ-வான துஷார் சவுத்ரி, "சோட்டா உதேப்பூர் மாவட்டத்தில் போலியாக அரசு அலுவலகத்தைத் திறந்து, பழங்குடியினர் பகுதிகளில் பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களை மேற்கொள்வதற்காக அரசு நிதியை மோசடி செய்தவர்கள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?" என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பழங்குடியினர் மேம்பாட்டு துறை அமைச்சர் குபேர் திந்தோர் அளித்த எழுத்துபூர்வ பதிலில், “சோட்டா உதேப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் போலி அரசு அலுவலகம் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே, இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பது குறித்து எந்த கேள்வியும் எழவில்லை" என தெரிவித்தார்.

இந்த பதிலில் திருப்தி அடையாத துஷார் சவுத்ரி, "பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் சோட்டா உதேப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 5 போலி அலுவலகங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவர்களும் பிடிபட்டனர்” என்றார்.

காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சஸ்பெண்ட்

கடந்த ஆண்டு அக்டோபரில் சோட்டா உதேப்பூர் மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்களுக்கான நிர்வாக பொறியாளரின் அலுவலகத்தை போலியாக அமைத்து ரூ.4.16 கோடி அரசு மானியங்களைப் பெற்றதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோல் விருப்ப ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பி.டி.நினாமா, 'பழங்குடி பகுதி துணைத் திட்டத்தின்' கீழ் ரூ.18.59 கோடி அரசு மானியங்களை குற்றவாளிகள் பெற உதவியதாக டாஹோட் மாவட்ட போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதனை காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் குறிப்பிட்டதற்கு, வாய்மொழியாக பதிலளித்த அமைச்சர் குபேர் திந்தோர், “இந்த மோசடி மாநில அரசால் முறியடிக்கப்பட்டது. பின்னர் அது ஊடகங்களில் வெளியானது. அதன்பிறகு தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்தோம். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளோம். இதுவரை 5 பேரை கைது செய்துள்ளோம்” என்றார்.

சஸ்பெண்ட்

அமைச்சரின் எழுத்துபூர்வ பதிலும், வாய்மொழி பதிலும் முரண்பாடாக இருந்ததால் பாஜக அரசு உண்மையை மறைக்கிறது என கூறி காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அவையில் கூச்சலிட்டனர். சபாநாயகர் பலமுறை கோரிக்கை விடுத்தும் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அமைதியடையவில்லை. இதையடுத்து சட்டப்பேரவை விவகாரத் துறை அமைச்சர் ருஷிகேஷ் படேல் காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அனைவரையும் சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவையில் இருந்த 10 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

குஜராத்தில் காங்கிரஸுக்கு 15 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். ஆனால் 5 எம்எல்ஏ-க்கள் அவைக்கு வராததால், அவர்கள் சஸ்பெண்ட் நடவடிக்கையில் இருந்து தப்பினர்.

இதையும் வாசிக்கலாமே...

x