பிரதமர் மோடியையும் என்னையும் பிரிக்கவே முடியாது: மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் உறுதி


பாட்னா: நரேந்திர மோடி மீதான தனது அன்பு அசைக்க முடியாதது என்றும், அவர் பிரதமராக இருக்கும் வரை அவரிடமிருந்து தன்னை பிரிக்க முடியாது என்றும் லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் கூறியுள்ளார்

வக்ஃப் வாரிய சட்டத் திருத்த மசோதா , மத்திய அரசுப் பணிகளில் லேட்டரல் என்ட்ரி முறை மற்றும் கிரீமிலேயர் போன்ற பிரச்சினைகளில் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி பாஜகவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது. இதனால் அக்கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக யூகங்கள் பரவின. மேலும் சமீபத்தில் சிராக் பஸ்வானின் சித்தப்பா பசுபதி குமார் பராஸ் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தது இந்த வாதங்களுக்கு வலுவூட்டியது.

இதுகுறித்து மனம் திறந்து பேசியுள்ள சிராக் பஸ்வான், “நரேந்திர மோடி மீதான எனது அன்பு அசைக்க முடியாதது. அவர் பிரதமராக இருக்கும் வரை என்னை அவரிடமிருந்து பிரிக்கமுடியாது. உண்மையில், எனது கருத்துக்கள் எப்போதும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றன. வக்ஃப் மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவிற்கு அனுப்ப வேண்டுமென கோரிக்கை வைத்தேன், அது நடந்தது" என்றார்

மேலும், “பிஹாரிலும், மத்தியிலும் பாஜகவுடன் எங்கள் கட்சி கூட்டணி வைத்துள்ளது. எனவே, தேசிய அளவிலும், எனது சொந்த மாநிலத்திலும் நாங்கள் கூட்டணி தர்மத்தைக் கடைப்பிடிப்போம். ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் எங்களுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றாலும், பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதை நாங்கள் வெறுக்கிறோம் என்று அர்த்தம் இல்லை. பாஜகவும் மற்ற என்டிஏ கட்சிகளும் எங்களை அணியில் சேர்க்க விரும்பினால், நாங்கள் சேர தயாராக இருக்கிறோம்.

பசுபதி குமார் பராஸ் அனைத்து பொது ஆதரவையும் இழந்துவிட்டார். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அவர் அனைத்து மக்களையும் சந்தித்து வந்தார். அந்தப் பயிற்சி பலனளிக்கவில்லை" என்று கூறினார்.

x