ஜார்க்கண்ட் மாநிலத்தின் அமைச்சராக பதவியேற்றார் ராம்தாஸ் சோரன்!


ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய அமைச்சராக ஜேஎம்எம் எம்எல்ஏ ராம்தாஸ் சோரன் இன்று பதவியேற்றார். மாநில அமைச்சரவையில் இருந்து முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் விலகிய பின்னர் இவர் பதவியேற்றுள்ளார்.

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் முன்னிலையில், ராஜ்பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுநர் சந்தோஷ் குமார் கங்வார், ராம்தாஸ் சோரனுக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

சம்பாய் சோரன் தனது அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை புதன்கிழமை ராஜினாமா செய்தார். அவர் இன்று பிற்பகல் பாஜகவில் இணைய உள்ளார்.

முன்னதாக, பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதற்கு முன்பு, ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சிறிது நேரத்திலேயே, பிப்ரவரி 2 ம் தேதி ஜார்கண்ட் முதல்வராக சம்பாய் சோரன் பதவியேற்றார்.

இதனையடுத்து ஹேமந்த் ஜாமீனில் வெளிவந்த பிறகு சம்பாய் சோரன் ஜூலை 3 அன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பிறகு ஹேமந்த் சோரன் ஜூலை 4 அன்று மீண்டும் முதல்வராக பதவியேற்றார். ஹேமந்த் சோரன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த சம்பாய் சோரன், கடந்த சில வாரங்களாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார்.

x