தமிழ்நாடு அரசு கொடுத்த 25 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை சந்திரயான் – 3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல், தாம் பயின்ற 3 கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்துள்ளார்.
இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சந்திரயான் - 3 திட்டம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டு விஞ்ஞானிகளை பற்றிய செய்தி கொடிகட்டி பறப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார்.
மேலும், சந்திரயான் - 3 திட்ட இயக்குனராக தமிழ்நாட்டை சேர்ந்த வீரமுத்துவேல் இருந்தது பெருமையளிப்பதாகவும், இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்த 9 விஞ்ஞானிகளுக்கும் தலா 25 லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில் சந்திரயான் - 3 திட்ட இயக்குனரான விழுப்புரத்தை சேர்ந்த வீரமுத்துவேல், தனக்கு வழங்கப்பட்ட 25 லட்ச ரூபாய் பரிசுத் தொகையை தாம் படித்த 4 கல்லூரிகளுக்கு பிரித்து வழங்கியுள்ளார்.
அதன்படி விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக், தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரி, திருச்சி என்.ஐ.டி., சென்னை ஐ.ஐ.டி. கல்லூரி முன்னாள் மாணவர் சங்கம் ஆகியவற்றிற்கு 25 லட்ச ரூபாயை வீரமுத்துவேல் பகிர்ந்து அளித்துள்ளார். இதையடுத்து விஞ்ஞானி வீரமுத்துவேலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.