உச்ச நீதிமன்றம் கண்டிப்பு: கவிதாவின் ஜாமீன் குறித்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்த ரேவந்த் ரெட்டி


கோப்புப்படம்

ஹைதராபாத்: டெல்லி மதுபான ஊழல் வழக்கில் பாரத் ராஷ்ட்ரா சமிதி (பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதாவின் ஜாமீன் குறித்து தெரிவித்த கருத்துக்காக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி வெள்ளிக்கிழமை வருத்தம் தெரிவித்துள்ளார். கவிதாவின் ஜாமீனுக்காக பாஜக மற்றும் பிஆர்எஸ் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கூறிய ரேவந்த் ரெட்டியின் கருத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்த மறுநாளில் அவர் இவ்வாறு வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "நீதித்துறையின் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் முழு நம்பிக்கையும் வைத்துள்ளேன். ஆக.29ம் தேதி வெளியான சில பத்திரிக்கைச் செய்திகள், எனக்கு கூறப்பட்ட கருத்துகள் நீதிமன்றத்தின் நீதித்துறையின் ஞானத்தை நான் கேள்விக்கு உட்படுத்துகிறேன் என்று எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

நீதித்துறையின் செயல்பாடுகளில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டவன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். ஊடக செய்திகளில் வெளியான அறிக்கைகளுக்காக நான் நிபந்தனையற்ற வருத்தத்தினை தெரிவித்துக்கொள்கிறேன். நீதித்துறை மற்றும் அதன் சுதந்திரத்தில் நான் நிபந்தனையற்ற மதிப்பு மற்றும் உயரிய மரியாதையும் கொண்டுள்ளேன். இந்திய அரசியலமைப்பு மற்றும் அதன் நெறிகளில் மிகுந்த நம்பிக்கை உள்ளவனாக நீதித்துறையை அதன் உயர்ந்த மதிப்பில் வைத்திருக்கிறேன், தொடர்ந்து வைத்திருப்பேன்." இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ரேவந்த் ரெட்டியின் கருத்துக்கு வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. இதுபோன்ற அறிக்கைகள் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்திவிடும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மேலும், அரசியல் கட்சிகளுடன் கலந்தாலேசித்து தான் நாங்கள் உத்தரவுகளை பிறப்பிக்கிறோமா? என்று கேள்வி எழுப்பி தனது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, தெலங்கானா முதல்வர் சார்பில் முகுல் ரோகத்கியிடம், "அவர் என்ன சொன்னார் என்பதை செய்தித்தாளில் நீங்கள் வாசித்தீர்களா? அவர் என்ன சொன்னார் என்பதை மட்டும் வாசியுங்கள். ஒரு பொறுப்புள்ள முதலமைச்சரிடமிருந்து என்னமாதிரியான அறிக்கை இது? இது மக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்திவிடும். ஒரு முதல்வர் வெளியிடக்கூடிய அறிக்கையா அது? அரசியலமைப்பு பதவி வகிப்பவர் இந்த முறையிலா பேசுவது?" என்று கேள்வி எழுப்பியது.

தொடர்ந்து, "அரசியல் போட்டியில் நீதிமன்றத்தை ஏன் அவர்கள் இழுக்கிறார்கள்? அரசியல் கட்சிகளை கலந்தாலோசித்த பின்னர் தான் நாங்கள் உத்தரவுகளைப் பிறப்பிக்கிறோமா? எங்களுடைய உத்தரவுகளை அரசியல்வாதிகளோ மற்ற யாருமோ விமர்சிப்பது குறித்து எங்களுக்கு அக்கறையில்லை. எங்களின் மனசாட்சி படி நாங்கள் எங்களின் கடமையினைச் செய்கிறோம்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

x