ஏறும்போது வேகமாக எடுக்கப்பட்ட பேருந்து; தவறிவிழுந்து மாணவன் பலி: அரசு ஓட்டுநர் கைது


பேருந்தில் ஏற முயன்றபோது ஓட்டுநர் வேகமாக இயக்கியதால் கல்லூரி மாணவன் தவறி விழுந்து உயிரிழந்தார். பேருந்து ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சூர்யா(19). இவர் கோயம்பேட்டில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று கல்லூரி முடிந்த பின்பு மாணவன் சூர்யா வழக்கம் போல சத்திரம் பேருந்து நிலையத்தில் 48c பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது கூட்டமாக வந்த பேருந்தில் முன்பக்க படிக்கட்டு வழியாக சூர்யா ஏற முயன்ற போது திடீரென ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்கி உள்ளார். இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்த சூர்யா மீது பேருந்தின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் மாணவன் சூர்யா சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், மாணவன் சூர்யாவின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்து ஏற்படுத்திய சின்ன காஞ்சிபுரத்தை சேர்ந்த பேருந்து ஓட்டுநர் வெங்கடேசன்(57) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஓட்டுநரிடம் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரிக்கு சென்ற மாணவன் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் பெற்றோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

x