குஜராத்தில் மழை பலி அதிகரிப்பு முதல் ‘ஃபார்முலா 4’-க்கு பச்சைக்கொடி வரை - டாப் 10 விரைவுச் செய்திகள் 


குஜராத்தில் மழை பலி அதிகரிப்பு: குஜராத்தில் கடந்த 4 நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாத மழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர்நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், தாழ்வான பகுதிகளில் வாழும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக வீடு இடிந்தும், தண்ணீரில் மூழ்கியும் வியாழக்கிழமை வரை 28 பேர் உயிரிழந்தனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 17,800 பேர் பாதுகாப்பாக இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். குறிப்பாக, வதோதராவில் ஆகஸ்ட் 28 வரை 12,000 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கிழக்கு ராஜஸ்தானில் இருந்து சவுராஷ்டிரா பகுதியை நோக்கி நகர்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக குஜராத்தில் கனமழை நீடிக்கும் என தெரிவித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், மாநிலம் முழுவதும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. இதனிடையே, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாஜக குற்றச்சாட்டுக்கு மம்தா மறுப்பு: ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவரின் பாலியல் வன்கொடுமை கொலைக்கு நீதி கேட்டு போராடும் மருத்துவர்களை ஒருபோதும் மிரட்டவில்லை என்று பாஜக குற்றச்சாட்டுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பயிற்சி மருத்துவர்களை மிரட்டுவதாக கூறும் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது என்றும், மருத்துவர்களின் இயக்கங்கள் உண்மையானவை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்கள் பாதுகாப்பு: மோடி அரசு மீது கார்கே சாடல்: “பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மோடி அரசு கடந்த 10 ஆண்டுகளில் உறுதியான எதையும் செய்யவில்லை” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். “சமூக மாற்றம் என்பது சுவர்களில் 'மகள்களைக் காப்போம்' என்று ஓவியம் வரைவதால் வருமா அல்லது அரசு சட்டம் - ஒழுங்கை திறமையாக கையாள்வதால் வருமா?” என்று அவர் கேள்விகளை அடுக்கியுள்ளார்.

நடிகர் முகேஷ் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு: மலையாள நடிகரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ-வுமான முகேஷ் உட்பட ஐந்து பேர் மீது கேரள காவல்துறை பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்துள்ளது. நடிகை ஒருவர் கொடுத்த பாலியல் குற்றச்சாட்டு புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏ முகேஷ், தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென்ற கண்டன குரலும் எழுந்துள்ளது.

காசாவில் 24 மணி நேரத்தில் 68 பேர் பலி! - காசாவில் இஸ்ரேல் நடத்தியத் தாக்குதலில் கடந்த 24 மணி நேரத்தில் 68 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 77 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மதுரை எய்ம்ஸ்: மத்திய அரசுக்கு ஐகோர்ட் கேள்வி: “கரோனா பரவல் 2022-ல் முடிந்துவிட்டது. இன்னும் கரோனாவை காரணமாகச் சொல்லக் கூடாது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து மத்திய சுகாதாரத் துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை செப்.24-க்கு ஒத்திவைக்கப்படுகிறது” என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பொறியியல் கல்லூரிகளில் கட்டண உயர்வு வாபஸ்: அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளர் ஜெ.பிரகாஷ் அனைத்து பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், “உயர் கல்வித் துறை அமைச்சரின் ஆணையின்படியும், பரிந்துரையின் படியும், தேர்வுக் கட்டணம், சான்றிதழ் கட்டணம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களின் உயர்வும் திரும்பப் பெறப்படுகிறது. எனவே, அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும் முன்பு வசூலிக்கப்பட்டு வந்த கட்டணங்களையே மாணவர்களிடம் வசூலிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலினுக்கு அமெரிக்காவில் உற்சாக வரவேற்பு! - தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்குள்ள சான்பிரான்சிஸ்கோ விமான நிலையத்தில், அமெரிக்க நாட்டின் சான்பிரான்சிஸ்கோவிற்கான இந்திய துணைத் தூதர் ஸ்ரீகர் ரெட்டி, தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அமெரிக்க வாழ் தமிழர்கள் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அமெரிக்க மண்ணில் தரையிறங்கியபோது தாய்த்தமிழ் உறவுகள் அளித்த நெகிழ்ச்சியான வரவேற்பில்" என தெரிவித்து புகைப்படங்களை இணைத்துள்ளார்.

பவெல் துரோவ் பிரான்ஸை விட்டு வெளியேற தடை: பிரான்ஸ் நாட்டில் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்ட டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவுக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் மீதான குற்றச்சாட்டு காரணமாக, அவர் பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஃபார்முலா-4 கார் பந்தயம் நடத்த தடையில்லை: ஐகோர்ட் - சென்னையில் ஃபார்முலா - 4 கார் பந்தயம் நடத்த தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், இந்த பந்தயம் நடத்தப்படுவதால் மருத்துவமனை மற்றும் ரயில் நிலையங்களுக்குச் செல்லும் பொதுமக்கள் யாருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் கார் பந்தயத்தை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

x