சிறையில் முதல் வகுப்பு கோரிய வதந்தி பரப்பிய பீகார் யூடியூப்பர்: அதிரடி காட்டிய உயர்நீதிமன்றம்


தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் யூடியூபர் மனிஷ் காஷயப்புக்கு சிறையில் முதல் வகுப்பு கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

டெல்லியை சேர்ந்த திரிபுவன் குமார் திவாரி, உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், என்னுடைய சகோதரர் மனிஷ் காஷ்யப். இவர் சிவில் இன்ஜினீயர். முறையாக வருமானவரி செலுத்தி வருகிறார். இவர் 2018-ம் ஆண்டு தனி யூடியூப் பக்கத்தை உருவாக்கி பீகார் மக்களின் குறைகளையும், ஊழல்களையும் வீடியோவாக பதிவு செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.

இதுபோன்ற செயல்பாடுகளினால் சமூக வலைதளத்தில் மிகப் பிரபலமான நபராக மாறினார். இந்தநிலையில் மனிஷ் காஷ்யப் பீகார் தொழிலாளிகள் தமிழ்நாட்டில் தாக்குவது போன்ற வீடியோ வெளியிட்ட வழக்கில் முதலில் பீகார் காவல்துறையினர் கைது செய்தனர். பின் மதுரை காவல்துறையிடம் அவரை ஒப்படைத்தனர். மதுரை காவல்துறையினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மனிஷ் காஷ்யப் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

மனிஷ் காஷ்யப் மார்ச் 30-ல் கைது செய்யப்பட்டார். 4 மாதங்களாக மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சந்தித்தபோது தமிழ் மொழி தெரியாது என்பதால் இங்கு பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக என்னிடம் தெரிவித்தார். மனிஷ் காஷ்யப்புக்கு புகை பிடிக்கும் பழக்கம் இல்லை. சிறையில் உள்ளவர்கள் தொடர்ந்து புகை பிடிப்பதால் தனக்கு மனதளவிலும் உடலளவிலும் பிரச்சினை ஏற்படுவதாக தெரிவித்தார்.

மனிஷ் காஷ்யப்புக்கு சிறையில் 'ஏ' வகுப்பு வழங்க வேண்டும் என மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, மனிஷ் காஷ்யப்புக்கு மதுரை மத்திய சிறையில் 'ஏ' வகுப்பு வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், எம்.நிர்மல்குமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில், மனுதாரருக்கு சிறையில் 'ஏ' வகுப்பு வேண்டிய மனு நிராகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நீதிபதிகள், மனிஷ் காஷ்யப் மீது கடுமையான குற்றச்சாட்டு உள்ளது. அரசு தரப்பில் மனு பரிசீலனை செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மனுதாரருக்கு நிவாரணம் வழங்க முடியாது எனத் தெரிவித்தனர். பின்னர் மனுதாரர் தரப்பில், மனுவை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கு அனுமதி வழங்கி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

x