ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் 2 எம்.பி-க்கள் ராஜினாமா: ஜெகன்மோகனுக்கு பெரும் பின்னடைவு


புதுடெல்லி: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.க்கள் மோபிதேவி வெங்கடரமண ராவ் மற்றும் பீதா மஸ்தான் ராவ் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் தெலுங்குதேசம் கட்சியில் இணையலாம் என கூறப்படுகிறது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் மோபிதேவி வெங்கடரமண ராவ் மற்றும் பீடா மஸ்தான் ராவ் ஆகியோர் இன்று (ஆக. 29) ராஜினாமா செய்தனர். மோபிதேவி வெங்கடரமண ராவ் மற்றும் பீடா மஸ்தான் ராவ் ஆகியோரின் ராஜினாமா கடிதங்களை மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத்தலைவருமான ஜக்தீப் தன்கர் ஏற்றுக் கொண்டார். மேலும், ராஜிநாமா செய்த 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் தெலுங்கு தேசம் கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெங்கடரமண ராவ் மற்றும் மஸ்தான் சமீபத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திரப் பிரதேச முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை சந்தித்ததாக கூறப்படுகிறது. மேலும், இன்னும் 6 ஒய்எஸ்ஆர்சிபி ராஜ்யசபா எம்.பிக்கள் கட்சியிலிருந்து வெளியேறலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து தெலுங்கு தேசம் கட்சி மீண்டும் மாநிலங்களவையில் நுழைய உள்ளது. 2019 முதல், ஆந்திராவின் அனைத்து 11 ராஜ்யசபா இடங்களும் ஒய்எஸ்ஆர்சிபியிடம் வசம் உள்ளன.

சமீபத்தில் நடந்துமுடிந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் தெலுங்கு தேசம்-ஜனசேனா கட்சி-பாஜக கூட்டணி அமோக வெற்றிபெற்றது. ஒய்எஸ்ஆர்சிபி படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அக்கட்சியிலுள்ள பல தலைவர்கள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர்.

x