சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ‘விதைக்கும்’ காகிதப் பேனா; கலக்கும் திண்டுக்கல் இளைஞர்


காகித பேனாக்களுடன் சிவபாலன்

சுற்றுச்சூழலை காக்கும் வகையில் மக்காத பிளாஸ்டிக்கை தவிர்த்துவிட்டு காகிதத்தால் ஆன, விதையுடன் கூடிய பேனாக்களை தயாரிக்கும் பணியில் இளைஞர் ஒருவர் ஈடுபட்டுள்ளார். இதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

எழுத்தால் உலகுக்கு விழிப்புணர்வு சேர்ப்பவர்கள் மத்தியில், எழுதும் பேனாவாலும் அவற்றை சேர்க்க முடியும் என்று நிரூபித்து வருகிறார் சிவபாலன். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்த இவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்துள்ளார். படிப்பை முடித்தவுடன் இவருக்கு ஏதேனும் சிறுதொழில் செய்யவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தொழிலில் முதலீடு செய்ய அதிக பணம் தேவை என்பதால், சிறிய அளவில் தொழிலை தொடங்க நினைத்தார்.

காகித பேனாக்கள்

அப்படித்தான் அவருக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் கையிலான காகிதப் பேனா தயாரிக்கும் உத்வேகம் பிறந்தது. இதற்காக மாவட்ட தொழில் மையம் உதவியுடன் கடன் பெற்று, முறைப்படி காகிதப் பேனா தயாரிக்கும் தொழிலை தொடங்கினார். தனியாக வேலையாட்கள் எவரையும் வைத்துக்கொள்ளவில்லை. குடும்ப உறுப்பினர்களே காகிதப் பேனா தயாரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர்.

இதுகுறித்து சிவபாலன் கூறுகையில், “ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. பால்பாய்ண்ட் பேனாக்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவை ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படுபவையாக உள்ளன. இதற்கு மாற்றாக சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பேப்பர் பேனா தயாரிக்கும் பணியில் ஈடுபட எண்ணினேன்.

இது 98 சதவீதம் பிளாஸ்டிக் இல்லாதது. இந்த பேப்பர் பேனாவை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்தாலும் அது சூழலுக்கு பாதிப்பு சேர்க்காது மக்கிவிடும். சிறப்பம்சமாக பேப்பர் பேனாவில் விதைகளையும் வைத்து உருவாக்குகிறோம். பேனாவை பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்தாலும், அதிலுள்ள விதை முளைப்புத்திறன் பெற்று செடி, மரமாக வளர்த்துவிடும். இதற்காக குறு மரங்களின் விதைகளை பேப்பர் பேனாவின் பின்புறத்தில் வைக்கிறோம்.

காகிதப் பேனாவில் முளைப்புத் திறன் பெற்ற விதைகள்

விற்பனையை பரவலாக்க, வாடிக்கையாளர்கள் தேவைக்கேற்ப பேப்பர் பேனாவில் வாசகங்கள் பிரிண்ட் செய்து தருகிறோம். பிறந்தநாள், திருமண விழாக்களுக்கு பரிசுப்பொருட்களாக ஆர்டர் தருபவர்கள், பெயர் பிரிண்ட் செய்தே பேப்பர் பேனா தயாரித்துதருகிறோம். ஒரு பேனா ரூ.5-க்கு விற்பனை செய்கிறோம். வாழ்த்துக்கள் பிரிண்ட் செய்யப்பட்ட பேனா ஒன்று ரூ.10-க்கு விற்பனை செய்கிறோம்.

ஆன்லைன் மூலமும், பள்ளிகளை ரேடியாக தொடர்பு கொண்டும் விற்பனை செய்கிறோம். மேலும் நண்பர்கள் மற்றும் அறிந்தோர் வட்டாரங்கள் மூலமும் ஆர்டர் பெற்று செய்துதருகிறோம். பேப்பர் பேனா விற்பனை அதிகரிப்பதன் வாயிலாக, மக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுவதுடன், நடைமுறையிலும் சுற்றுச்சூழல் பாதிப்பு தவிர்க்கப்படுகிறது. கூடுதலாக, அதில் இருக்கும் விதை மூலம் கணிசமான மரங்களை உருவாக்கி இயற்கைவளத்துக்கும் நம்மால் பங்களிக்க முடியும்” என்றார்.

x