குஜராத் வெள்ளம்: 18,000 பேர் வெளியேற்றம் ; 3 நாட்களில் பலி எண்ணிக்கை 28 ஆக அதிகரிப்பு!


புதுடெல்லி: குஜராத் மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த மூன்று நாட்களில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளம்பாதித்தப் பகுதிகளில் இருந்து சுமார் 18,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, கச், தேவபூமி, துவாரகா, ஜாம்நகர், மோர்பி, சுரேந்தர்நகர், ராஜ்கோட், போர்பந்தர், ஜூனார்க், கிர் சோம்நாத், அம்ரேலி, பகவன்நகர் மற்றும் போட்டட் ஆகிய 12 மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை சவுராஸ்ட்ரா பகுதியில் உள்ள தேவபூமி துவாரகா, ஜாம்நகர், ராஜ்கோட் மற்றும் போர்பந்தர் ஆகிய பகுதிகளில் 50 மி.மீ., முதல் 200 மி.மீட்டர் வரை மழை பெய்துள்ளது. தேவபூமி துவாரகா மாவட்டத்தின் பகவன் தாலுகாவில் இந்த பருவமழை காலத்தில் 185 மி.மீ., மழை பெய்துள்ளது. இது மாநிலத்தில் பெய்த மிக அதிகமான மழையாகும்.

இதனிடையே, 14 தேசிய பேரிடர் மீட்பு படை (என்டிஆர்எஃப்), 22 மாநில பேரிடர் மீட்பு படை (எஸ்டிஆர்எஃப்) ஆகியவைகளுக்கு மீட்பு மற்றும் நிவராண பணிகளில் உதவுவதற்காக ஆறு ராணுவத்தின் ஆறு குழுக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. வெள்ளம்பாதித்த பகுதிகளில் இருந்து சுமார் 40,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர் என மாநில பேரிடர் மீட்பு கமிஷனர் அலோக் பாண்டே தெரிவித்துள்ளார்.

என்டிஆர்எஃப் ஆய்வாளர் மாஞ்சித் கூறுகையில், "கடந்த இரண்டு நாட்களில் துவாரகாவில் கனமழை பெய்துள்ளது. மக்களின் வீடுகளில் வெள்ளநீர் புகுந்துள்ளது. எங்களுடைய குழு 95 பேரை மீட்டுள்ளது" என்று தெரிவித்தார். இதனிடையே மழைதொடர்பான விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக புதன்கிழமை பிரதமர் மோடி குஜராத் முதல்வர் பூபேந்திர பாட்டீலுடன் தொலைப்பேசியில் பேசினார். அப்போது அவர், மத்திய அரசின் சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். "மக்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பதற்கான வழிகாட்டுதல்களை பிரதமர் வழங்கினார். குஜராத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும் என்று பிரதமர் உறுதியளித்தார் என்று முதல்வர் கூறினார்.

இதனிடையே, மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மாநில முதல்வர் பாடேல் ஆய்வு செய்தார். குறிப்பாக வடோதரா நகரம் மற்றும் மாவட்டம், தேவபூமி துவாரகா மற்றும் ஜாம்நகர் மாவட்டங்களில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் மக்களின் நிவாரண பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு வலியுறுத்தினார்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களுக்கு வெள்ளம் வடியும் வரை உணவு மற்றும் தண்ணீர், மருந்துகள் வழங்குவது போன்றவைகளுக்கு முன்னுரிமை அளிப்பதை அரசின் தற்போதைய நோக்கம். அதுமட்டும் இல்லாமல் மின்சாரம் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அதனை உடனடியாக சீர்செ்ய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்று முதல்வர் தெரிவித்தார்.

x