தண்ணீரை பீய்ச்சி அடித்து விரட்டப்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள்! பாட்னாவில் பரபரப்பு


அங்கன்வாடி பணியாளர்களை தண்ணீர் பீய்ச்சி கலைத்த போலீஸார்

ஊதிய உயர்வு உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பீகார் சட்டப்பேரவையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன்வாடி ஊழியர்கள் தன்ணீரை பீய்ச்சி அடித்து போலீஸார் கலைத்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.

பீகார் மாநிலத்தில் பணியாற்றி வரும் அங்கன்வாடி பணியாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பல ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஐந்தாயிரம் ரூபாய் என்ற சொற்ப ஊதியத்திற்கு பணியாற்றி வரும் தங்களுக்கு, ஊதிய உயர்வை அறிவிக்க வேண்டும் எனவும் தங்களை அரசு பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் பாட்னாவில் உள்ள சட்டப்பேரவை அலுவலகம் முன்பு இன்று முற்றுகை போராட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

அங்கன்வாடி பணியாளர்களை தண்ணீர் பீய்ச்சி கலைத்த போலீஸார்

அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததை தொடர்ந்து அவர்களை கலைக்க போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கூட்டத்தை கலைத்தனர். அப்போது பெண் அங்கன்வாடி ஊழியர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த ஊழியரை அங்கிருந்த போலீஸார், உடனடியாக வாகனம் ஒன்றில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட பெண் மயக்கம்

இதனிடையே அங்கன்வாடி பணியாளர்கள் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்ததற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அம்மாநில பாஜக நிர்வாகி செஷாத் பூனாவாலா, கோரிக்கைகளை நிறைவேற்றாத நிதிஷ் அரசாங்கம், காட்டாட்சியை கட்டவிழ்த்து விட்டு உள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

x