பாடம் சொல்லித்தர ஆசிரியர்கள் இல்லாததால் விரக்தியடைந்த மாணவர் ஒருவர் தங்கள் அதிருப்தியை தேர்வுதாளில் எழுதிய பதில் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.
ஒடிசா மாநிலம் ஜஜ்பூரில் பிரஹலாத் சந்திர பிரம்மச்சாரி அரசு உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 95 மாணவர்கள் சமஸ்கிருத பாடத்தை தேர்வு செய்து படித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு பாடம் சொல்லித்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், பள்ளியில் இருந்த சம்ஸ்கிருத ஆசிரியரும் வேறு இடத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால், கடந்த 5 மாதங்களாக சம்ஸ்கிருத வகுப்பு நடத்தப்படவில்லை என கூறப்படுகிறது. அதேபோல், வரலாறு, புவியியல் பாடங்களை நடத்தவும் ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளி நிர்வாகம் திணறி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்த பள்ளியில் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் சம்ஸ்கிருத பாடத்தேர்வு எழுதிய 9ம் வகுப்பு மாணவர் ஒருவர், ''தங்களுக்கு பாடம் சொல்லித்தர ஆசிரியர் இல்லை. அதனால், எங்களுக்கு என்ன தெரியுமோ அதை எழுதுகிறோம். எங்களிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்காதீர்கள்'' என தேர்வுத்தாளில் எழுதியுள்ளனர். இதேபோல், பல்வேறு மாணவர்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பெற்றோர், அரசு பள்ளிகளை தரம் உயர்த்துவதாக கூறி வருகிறது. ஆனால், ஆசிரியர்களை நியமிக்காமல் இருப்பதால் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், அரசு உடனடியாக ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்துள்ளனர்.