மீண்டும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவரானார் மாயாவதி: போட்டியின்றி தேர்வு


லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவராக மாயாவதி மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மத்திய செயற்குழு (சிஇசி) மற்றும் தேசிய அளவிலான மூத்த நிர்வாகிகள் மற்றும் மாநில கமிட்டிகளின் தலைவர்கள் மற்றும் நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இந்த சிறப்புக் கூட்டத்தில் தேசிய தலைவராக மாயாவதி மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

68 வயதான மாயாவதி, உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வராக நான்கு முறை பதவி வகித்தவர். பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனர் கன்ஷி ராம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு அவரை தனது அரசியல் வாரிசாக அறிவித்தார்.

முன்னதாக, மாயாவதி அரசியலில் இருந்து ஓய்வுபெற உள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியானது. ஆனால் இதனை மாயாவதி மறுத்தார். இது குறித்து மாயாவதி தனது எக்ஸ் பதிவில், ‘அம்பேத்கரியத்தை பலவீனப்படுத்தும் எதிரிகளின் சதிகளை முறியடிப்பதற்காக, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சிக்கு அர்ப்பணிப்புடன் இருப்பதே எனது முடிவாகும். தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது என்ற கேள்விக்கே இடமில்லை’ என்று குறிப்பிட்டார்.

x