கவிதாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்; பிஆர்எஸ் கட்சியினர் நிம்மதி!


புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக தெலங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகளும், அம்மாநில சட்டமேலவை உறுப்பினருமான கவிதாவை அமலாக்கத்துறை கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி கைது செய்தது. இதையடுத்து அவர் தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவா் மீது அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தரப்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி இருந்த டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு சில வாரங்களுக்கு முன்பு ஜாமீன் வழங்கப்பட்டது.

இதனையடுத்து தனக்கும் ஜாமீன் வழங்க கோரி கவிதா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் கவிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இன்று நீதிபதிகள் பி.ஆர்.கவை மற்றும் கே.வி.விஸ்வநாதன் அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, கவிதா ஏற்கனவே ஐந்து மாதங்களுக்கும் மேலாக சிறையில் இருந்ததையும், விசாரணை விரைவில் எதிர்பார்க்கப்படாது என்பதையும் சுட்டிக்காட்டியதுடன், "ஜாமீன் மனுக்களை பரிசீலிக்கும் போது சட்டம் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்குகிறது" என்று குறிப்பிட்டது. மேலும், ஜூலை மாதம் கவிதாவின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நிராகரித்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து இன்று மாலைக்குள் கவிதா சிறையில் இருந்து விடுவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கவிதாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை பிஆர்எஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

x