இந்தியாவுக்கு எதிரான பதிவுக்கு ஹார்ட்டீன் போட்ட வங்கதேச மாணவி: சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பு


சில்சார்: அசாமின் சில்சாரில் உள்ள இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (என்ஐடி) பயின்ற வங்கதேச மாணவி ஒருவர், இந்தியாவுக்கு எதிரான சமூக வலைதள பதிவுக்கு இதயம் ஈமோஜி பதிவிட்டதால் சொந்த நாட்டுக்கே அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக போலீஸார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

இதுகுறித்து கச்சார் காவல் கண்காணிப்பாளர் நுமல் மஹாட்டா கூறுகையில், "சில்சாரில் உள்ள என்ஐடி-யில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறையில் இரண்டாமாண்டு பயின்று வரும் வங்கதேசத்தைச் சேர்ந்த மைஷா மஹாஜாபின் என்ற மாணவி, கரீம்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள சுதர்கண்டியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி வழியாக திங்கள்கிழமை வங்க தேசத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.

இது நாடு கடத்தல் இல்லை. வங்கதேச அதிகாரிகளுடன் கலந்தாலோசித்த பின்பே அவர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். அந்த மாணவி, அவரது சீனியர் மாணவரும் சில்சார் என்ஐடியின் முன்னாள் மாணவருமான சஹதத் ஹுசைன் அல்ஃபி என்பர் முகநூலில் பகிர்ந்த இந்தியாவுக்கு எதிரான பதிவொன்றுக்கு இதயம் ஈமோஜி பகிர்ந்திருந்தார். சஹதத் தனது படிப்பு முடிந்த நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளியேறினார். தற்போது அவர் வங்கதேசத்தில் வசித்து வருகிறார்.

அந்த மாணவி இதயம் ஈமோஜி பகிர்ந்த பதிவை பார்த்தப் பலர் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். மஹாஜாபின் தன்னை வங்கதேசத்துக்கு அனுப்பி வைக்குமாறு என்ஐடி அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

அவர் இன்னும் தனது படிப்பை முடிக்கவில்லை. படிப்பை முடிக்கத் திரும்பி வருவாரா என்பது குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. இந்திய - வங்கதேச அரசுகளுக்கிடையேயான புரிந்துணர்வின் அடிப்படையில் சில்சார் என்ஐடியில் 70 வங்கதேச மாணவர்கள் பயில்கின்றனர். அவர்களில் வங்கதேச இந்துக்கள் 40 பேர் உள்ளனர்.

நான் தனிப்பட்ட முறையில் அவர்களைச் சந்தித்தேன். இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள் உள்ளிட்ட எந்தவிதமான தவறான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்" என்று காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

இதனிடையே, இந்து ராக்கி தளத்தின் செய்தித் தொடப்பாளர் சுவாசிஸ் சவுதரி செய்தி நிறுவனம் ஒன்றிடம் கூறுகையில், "என்ஐடி முன்னாள் மாணவியின் இந்திய விரோத பதிவினை நானும் பார்த்தேன். தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் படி போலீஸுக்கு தெரிவித்திருந்தேன்.

வங்கதேசத்தின் ராஜ்சாஹி பல்கலைக்கழகத்தில் இருந்து எழுதப்பட்ட சில இந்தியாவுக்கு எதிரான முகநூல் பதிவுகள் அனுப்பப்பட்டிருந்தன. அதில் ஒரு பதிவுக்குதான் மஹாஜாபின், இதயம் ஈமோஜி பகிர்ந்திருக்கிறார்" என்று தெரிவித்தார்.

x