விவசாயிகளின் போராட்டத்தால் வங்கதேசத்தின் நிலைமை ஏற்பட்டிருக்கும்: கங்கனா ரனாவத் கருத்தால் சர்ச்சை


புதுடெல்லி: விவசாயிகள் நடத்திய போராட்டத்தால் வங்கதேசத்தின் நிலை இந்தியாவிலும் ஏற்பட்டிருக்கும் என பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நடிகையும் பாஜக எம்.பி.யுமானகங்கனா ரனாவத் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேசும்போது, “திரும்ப பெறப்பட்ட 3 வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாயிகள் இன்னும் போராடுகின்றனர். இந்தப் போராட்டத்துக்கு வெளிநாட்டு சக்திகள் ஆதரவு அளிக்கின்றன. இந்தப் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலை இங்கும் ஏற்பட்டிருக்கும். இதில் வெளிநாட்டு சதி இருக்கிறது. நாட்டைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை” என கூறுகிறார்.

இவருடைய இந்த கருத்துக்கு பாஜகவைச் சேர்ந்தவர்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பஞ்சாப் மாநில பாஜக மூத்த தலைவர் ஹர்ஜித் கார்வால் கூறும்போது, “இது கங்கனாவின் துறை அல்ல. விவசாயிகள் குறித்து அவர் பேசக்கூடாது. இது அவருடைய தனிப்பட்ட கருத்து.பிரதமர் மோடியும் பாஜகவும்விவசாயிகளுக்கு ஆதரவானவர்கள். எதிர்க்கட்சியினர் எங்களுக்கு எதிராக செயல்படுவது போல, கங்கனாவும் செயல்படுகிறார். இதுபோன்ற கருத்துகளை அவர் தெரிவிக்கக் கூடாது” என்றார்.

சண்டிகர் விமான நிலையத்தில், கடந்த ஜூன் மாதம் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் காவலர் கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார். விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கங்கனா ஏற்கெனவே தெரிவித்த கருத்துக்காக அவரை அறைந்ததாக அந்தகாவலர் தெரிவித்தார். பின்னர் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

x