மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 120 அடியிலிருந்து 117 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து சரிந்து வருவதால் காவிரிப் பாசன விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 117 கன அடியாக குறைந்துள்ள காரணத்தால் அணையின் நீர்மட்டம் 89.51 அடியிலிருந்து 88.58 அடியாக குறைந்துள்ளது. ஒரே நாளில் சுமார் ஒரு அடி அளவுக்கு அணையின் நீர்மட்டம் குறைந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேட்டூர் அணையில் தற்போதைய நீர் இருப்பு 51.04 டிஎம்சியாக உள்ளது. அணையிலிருந்து இப்போது பாசனத்துக்காக விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடந்து சரிந்து வருவதால், கடைமடை வரை முறையாக தண்ணீர் செல்லுமா என்ற அச்சத்தில் விவசாயிகள் மூழ்கியுள்ளனர். கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறைவாகவே பொழிந்துள்ளதாகவும், அதனால் தங்கள் மாநிலத்தில் உள்ள அணைகளே வறட்சி அபாயத்தில் உள்ளதாகவும் கர்நாடக அரசு அறிவித்துள்ளது விவசாயிகள் மத்தியில் பெரும் கலக்கத்தை உருவாக்கியுள்ளது. கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு திறக்கவேண்டிய நீரைக் கேட்டுப்பெற தமிழக அரசு இறங்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.