மாணவிகள் பாதுகாப்புக்கு பள்ளிகள், விடுதிகளில் எச்சரிக்கை அலாரம்கள்: மகாராஷ்டிர அரசு அதிரடி


மும்பை: மகாராஷ்டிர மாநிலம் பத்லாபூரில் இரண்டு 4 வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த பள்ளிகள் மற்றும் விடுதிகளில் எச்சரிக்கை அலாரம் பொத்தான்களை பொருத்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய மகாராஷ்டிர கல்வி அமைச்சர் தீபக் கேசர்கர், “பள்ளிகளில் சிசிடிவிகளைப் போல, பேனிக் பட்டன்களையும் பொருத்தலாம். விடுதிகளிலும் பேனிக் பட்டன் பொருத்தலாம். மாணவிகளின் பாதுகாப்புக்கு இது ஒரு மேம்பட்ட தொழில்நுட்பம் ஆகும்.

மும்பை மண்டல துணை இயக்குனர் தலைமையில், பத்லாபூர் சம்பவத்தை புலனாய்வு குழு விசாரித்தது. பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் விசாரணையில் ஈடுபட்டனர். எந்தெந்த பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்வது என்பதை போலீஸார் முடிவு செய்வார்கள். குற்றவாளி மட்டுமல்லாமல் அலட்சியம் செய்தவர்கள் இணை குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 16 அன்று, பத்லாபூர் பள்ளியில் உள்ள பெண்கள் கழிப்பறைக்குள், 23 வயது ஆண் துப்புரவு பணியாளரால் இரண்டு நான்கு வயது சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அக்ஷய் ஷிண்டே என்பவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்காத பள்ளி அதிகாரிகள் மீது போக்சோ சட்டத்தின்கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

x