லடாக்கில் புதியதாக 5 மாவட்டங்கள் - மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு!


புதுடெல்லி: லடாக்கில் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் இருந்து தனியே பிரிக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தில் 5 புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளது மத்திய அரசு.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்து, 2019ல் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதனால் ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் மாற்றப்பட்டது.

இந்த நிலையில் இன்று லடாக்கின் 5 புதிய மாவட்டங்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார். அதில் "லடாக் மக்களுக்கு ஏராளமான வாய்ப்புகளை உருவாக்க மோடி அரசு உறுதிபூண்டுள்ளது. இன்று லடாக்கில் புதியதாக 5 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. புதிய மாவட்டங்களான ஸன்ஸ்கார், ட்ராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங், ஒவ்வொரு மூலை முடுக்கிலும் நிர்வாகத்தை மேம்படுத்தும். இதன் மூலம் மக்கள் நலத்திட்டங்கள், மக்களின் வீட்டு வாசல்களிலேயே கொண்டு சேர்க்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்

இந்த அறிவிப்பை பாராட்டியுள்ள பிரதமர் மோடி, "லடாக்கில் ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்குவது சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சிக்கான முக்கியமான ஒரு படியாகும். சேவைகள் மற்றும் வாய்ப்புகளை மக்களுக்கு இன்னும் நெருக்கமாக கொண்டு வர ஜான்ஸ்கர், டிராஸ், ஷாம், நுப்ரா மற்றும் சாங்தாங் ஆகியவை இப்போது அதிக கவனம் செலுத்தும். அங்குள்ள மக்களுக்கு வாழ்த்துகள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

x