‘அதிகபட்ச சில்லறை விலையை வரையறுக்க வேண்டும்’’ - அரசுக்கு அகில இந்திய நுகர்வோர் இயக்கம் கோரிக்கை


குறியீட்டுப் படம்

சென்னை: அதிகபட்ச சில்லறை விலையை மத்திய அரசு வரையறுக்க வேண்டும் என்று அகில இந்திய நுகர்வோர் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அகில இந்திய நுகர்வோர் இயக்கத்தின் தென்னிந்திய அமைப்புச் செயலாளர் எம்.என். சுந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்ட அளவியல் சட்டத்தின் கீழ் 1970 ஆம் ஆண்டு மத்திய அரசு அதிகபட்ச சில்லறை விலையை (MRP) அறிமுகப்படுத்தியது. இந்த சட்டத்தின்படி, சில்லறை விற்பனை பொருளின் பேக்கிங்கில் எம்ஆர்பி அச்சிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதோடு, சில்லறை விற்பனையாளர், எம்ஆர்பி-க்கு குறைவான விலையில் பொருளை விற்க முடியும்; ஆனால், எம்ஆர்பி-க்கு மேல் விற்பது குற்றமாகும். ஆனால், எம்ஆர்பி எவ்வாறு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதற்கான எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் சட்டம் உள்ளது ஆச்சரியம் அளிக்கிறது.

இன்று, உற்பத்தியாளர்கள் தங்கள் மனதில் தோன்றியதை எம்ஆர்பியாக நிர்ணயிக்கிறார்கள். எம்ஆர்பி வெளிப்படையானதாக இல்லை. இதனால், உற்பத்தி விலைக்கு தொடர்பில்லாத விலையை, நுகர்வோர் செலுத்த வேண்டிய நிலை உள்ளது. ஒரு பொருளின் எம்ஆர்பியை தீர்மானிப்பதில் அரசுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதால், நியாயமற்ற முறையில் எம்ஆர்பி நிர்ணயிக்கப்படுகிறது.

குறிப்பாக, மருந்துகள் விஷயத்தில் நுகர்வோர் அசாதாரணமான முறையில் கொள்ளையடிக்கப்படுகிறார்கள். எனவே, எம்ஆர்பி என்பது நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும், எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்று அகில இந்திய நுகர்வோர் இயக்கம் கோருகிறது.

தயாரிப்பு விலை (Cost of Production - COP) மற்றும் பொருளின் முதல் விற்பனை விலை (First Sale Price - FSP) ஆகியவற்றின் அடிப்படையில் எம்ஆர்பி நிர்ணயிக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுவதன் மூலமே அனைத்து நுகர்வோர்களும் பயன்பெறுவார்கள். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க அகில இந்திய நுகர்வோர் இயக்கம் வலியுறுத்துகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

x