9-ம் வகுப்பு மாணவி ஒருவர் தேர்வு அறைக்குள் நுழையும்போது மாரடைப்பு காரணமாக சுருண்டு விழுந்து இறந்தார். குஜராத் மாநிலத்தில் இந்த துயர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.
ராஜ்கோட் மாவட்டம் ஜஸ்டான் பகுதியை சேர்ந்தவர் சாக்ஷி. 15 வயதாகும் இவர், தான் பயிலும் ஷாந்தபா கஜேரா பள்ளியில் நேற்று பரிதாபமாக மரணமடைந்தார். தேர்வு அறைக்குள் நுழையும்போது மாரடைப்பில் சுருண்டு விழுந்தவரை, மயக்கமடைந்ததாக கருதி பள்ளி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக, மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இளம் வயதினர் மத்தியில் மாரடைப்பு அதிகரித்து வருகிறது என்ற போதும், அதன் அதீதமாய் 15 வயது சிறுமி ஒருவர் பள்ளி அறையில் மாரடைப்பால் இறந்திருப்பது மருத்துவர்களுக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போஸ்ட்மார்டம் முடிவுகள் அடிப்படையில் இறந்த மாணவிக்கு நேரிட்ட மாரடைப்பின் பின்னணியை முழுமையாக அறிய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும், சிறுமியின் பெற்றோரிடம் ’மாணவி உடல் நலக்குறைவுடன் இருந்தாரா, இதய நோய் தொடர்பான பாதிப்புகள் ஏற்கனவே அவருக்கு இருந்து வந்துள்ளதா’ என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இவை தவிர்த்து தேர்வு அறைக்குள் நுழையும்போது மாணவிக்கு மாரடைப்பு நேரிட்டதால், பள்ளி செயல்பாடுகள் மற்றும் ஆசிரியர்கள் தந்த அழுத்தங்கள் எதுவும் அவரது உடல்நலத்தை பாதிக்கும் வகையில் இருந்ததா என்பது குறித்தும் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 9ம் வகுப்பு மாணவி மாரடைப்பு காரணமாக தேர்வு அறையில் சுருண்டு விழுந்து இறந்திருப்பது குஜராத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...