கர்நாடகா மாநிலம், மங்களூருவில் மகாபாரதம், ராமாயணம் கற்பனை என மாணவர்களுக்குப் பாடம் நடத்திய ஆசிரியை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம், மங்களூருவில் உள்ளது செயின்ட் ஜெரோசா பள்ளி. இப்பள்ளி ஆசிரியை ஒருவர் 7-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்திய போது மகாபாரதம், ராமாயணம் ஆகியவை கற்பனை என பாடம் நடத்தியதாக தெரிகிறது. மேலும், 2002-ம் ஆண்டு கோத்ரா கலவரம், பில்கிஸ் பானு பலாத்கார சம்பவம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் வெறுப்பு கருத்துகளை பெண் ஆசிரியை பரப்பியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில் இதனையறிந்த பாஜகவினர் அந்த ஆசிரியை மீது புகார் தெரிவித்தனர். மேலும், பாஜக எம்எல்ஏ வேதியாஸ் காமத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அந்த ஆசிரியையை கண்டித்து போராட்டமும் நடத்தினர். இதைத் தொடர்ந்து புகாருக்குள்ளான ஆசிரியை பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து எம்எல்ஏ வேதியாஸ் காமத் கூறுகையில், “இதுபோன்ற ஆசிரியரை ஆதரித்தால் நியாயம் என்னவாவது? நீங்கள் வணங்கும் இயேசு சமாதானத்தை ஆசிர்வதிக்கிறார்.
ஆனால், கிறிஸ்துவ சகோதரிகள் எங்கள் இந்து குழந்தைகளைக் கயிறு கட்டியிருப்பது, பூ வைத்துக்கொள்வது போன்றவற்றை மேற்கொள்ளக் கூடாது என்கின்றனர். ராமர் மீது பால் ஊற்றுவது வீணாகும் என அவர்கள் கூறியுள்ளனர். நம்பிக்கையை அவமதித்தால் யாராலும் அமைதியாக இருக்க முடியாது” என்றார்.
இந்நிலையில் பள்ளி வெளியிட்டுள்ள அறிக்கையில், “செயின்ட் ஜெரோசா பள்ளிக்கு 60 ஆண்டுகால வரலாறு உள்ளது. இன்றுவரை இதுபோன்ற சம்பவம் எதுவும் நடக்கவில்லை. இந்த துரதிருஷ்டவசமான சம்பவம் ஒரு தற்காலிக அவநம்பிக்கையை உருவாக்கியுள்ளது. எங்கள் நடவடிக்கை நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப உதவும். மேலும், மாணவர்களின் சிறந்த எதிர்காலத்துக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் மங்களூரு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.