கடந்த சனிக்கிழமையுடன் பள்ளியின் முதல்வர் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருக்கிறார் சிஸ்டர் லிசி. மேஜையெங்கும் பூங்கொத்துக்களும், மாணவர்களின் வாழ்த்து அட்டைகளுமாக இறைந்து கிடைக்கிறது.
கேரளத்தின் தோப்பும்பாடியில் இருக்கிறது 'அவர் லேடி கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளி. இங்கிருந்து தான் ஓய்வுபெற்றிருக்கிறார் சிஸ்டர் லிசி. 13 வருடங்களுக்கு முன்பு இந்தப் பள்ளியின் பிளாட்டினம் விழா. அதைக் கொஞ்சம் வித்தியாசமாக கொண்டாட நினைத்தது பள்ளி நிர்வாகம்.
ஆசிரியைகள் ஆளாளுக்கு ஒரு யோசனையைச் சொன்னார்கள். அதில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சிஸ்டர் லிசி சொன்ன யோசனை அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தது. சிலர் அதைக் கேட்டு வியந்தார்கள்... பலர் அதை வியாக்யானமாக பேசினார்கள். ஆனால், என்னால் முடியும் என்று தன்னம்பிக்கை தளராமல் இருந்தார் லிசி
தனது வகுப்பில் படிக்கும் மாணவிகளில் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கிய கடலோடிகளின் பிள்ளைகள் என்பதும் வயிற்றுக்கான அவர்களது அன்றாடப் போராட்டங்களைப் பற்றியும் லிசிக்கு நன்றாகவே தெரியும்.
அந்த புரிதல் இருந்ததால் தான், தனது பள்ளியின் பிளாட்டினம் விழாவில் வீடற்ற ஒரு மாணவிக்கு வீடுகட்டிக் கொடுத்தால் என்ன என்ற யோசனை அவருக்குள் உதித்தது. அதுவும் தந்தையை இழந்த ஒரு மாணவிக்கு என்ற போது அதன் தாக்கம் இன்னும் அதிகமாக இருந்தது.
யோசனை சொன்னதுடன் சிஸ்டர் லிசி விட்டுவிடவில்லை. அதற்கு செயல்வடிவம் கொடுப்பதிலும் முனைப்பாக இருந்தார். பாதிரியார் குழுவினரிடமிருந்து முதல்கட்டமாக ரூ. 25 ஆயிரத்தை நன்கொடையாக வசூலித்தார். அடுத்து அவரது திருச்சபையின் மூல 25 ஆயிரம் திரட்டினார். நம்பிக்கை துளிர்த்தது. மீதிப் பணத்துக்காக முழுவீச்சில் களத்தில் இறங்கினார்; நினைத்ததைச் சாதித்தும் காட்டினார்.
தகப்பனில்லா மகளுக்கு பாதுகாப்புடன் வசிக்க ஒரு வீடு கிடைத்ததில் லிசியின் கனவு நனவாகியது. அப்போதும் கூட பின்னாட்களில் தான் பெரிய வீட்டுப் புரட்சியை உண்டாக்குவோம் என அவர் அறிந்திருக்கவில்லை.
இடைப்பட்ட காலத்தில் ஆசிரியையாகப் பணியாற்றிய அதே பள்ளியின் முதல்வராக தன்னை தரம் உயர்த்திக் கொண்டார் லிசி. அப்போதும் வீடுகட்டும் முயற்சியை அவர் விடவில்லை. இன்னும் வேகமாக சுழன்றார். கேரளம் முழுவதும் 199 வீடுகளை பள்ளி மாணவிகளுக்காக கட்டி முடித்து ஒப்படைத்திருக்கிறார். கடந்த சனிக்கிழமை பணியிலிருந்து விடைபெறும் போதும் ஒரு வீட்டின் கட்டுமானப் பணிகள் பாதியில் இருந்தது. அதுவும் முடிக்கப்பட்டு இந்த மாதம் 23 -ம் தேதி அதற்கான சாவியும் 6-ம் வகுப்பு மாணவி ஒருவரின் கைக்குப் போகவிருக்கிறது.
'சஹ படிக்கொரு பவனம்' (பள்ளித் தோழருக்கான வீடு) என்ற பெயரில் தொடங்கப்பட்டது லிசியின் இந்த புரட்சிகர இயக்கம். கடந்த காலத்தை திரும்பிப் பார்த்தபடி பேசும் சிஸ்டர் லிசி, “முதல் வீடு கட்டி முடிக்கப்பட்ட போது கையில் 25 ஆயிரம் ரூபாய் பாக்கி இருந்தது. இதைவைத்தே அடுத்த வீட்டுக்கான அடித்தளத்தைப் போடுவோம் என்ற நினைப்பில், ‘லேடிஸ் ஹவுஸ் சேலஞ்ச்’ என்ற திட்டத்தைத் தொடங்கினேன். பிறருக்கு உதவுவதில் ஒருமித்த எண்ணம் கொண்டவர்களையும் சேவை அமைப்புகளையும் ஒருங்கிணைத்து வீடற்ற ஏழைகளுக்கு வீடு கட்டித் தருவதுதான் இந்த அமைப்பின் நோக்கம்.
முதலில் எங்கள் பள்ளி மாணவர்களின் குடும்பங்கள் மீதுதான் கவனம் குவிந்தது. பின், இந்த திட்டம் கேரள மாநிலம் முழுவதுமிருந்தும் வீட்டற்ற மாணவர்களைத் தேட வைத்தது. திருச்சூரில் இருந்து திருவனந்தபுரம் வரை பல்வேறு மாவட்டங்களில் வீடுகளை கட்டி, பயனாளிகளுக்கு வழங்கியிருக்கிறோம்” என்கிறார்.
“வீடுகட்டிக் கொடுத்ததோடு மட்டுமல்லாது... சொந்தமாக வீடுகட்டிக்கொள்ள இடமில்லாதவர்களுக்காக நிலத்தையும் தானமாக வாங்கிக் கொடுத்தோம். அந்த நிலத்தில் தான் எங்களது முயற்சியில் வீடுகள் கம்பீரமாக கட்டுமானம் பெற்றன.
எங்களது முயற்சியைப் பார்த்துவிட்டு ஒரு கொடையாளர் தனது 72 சென்ட் நிலத்தில் கட்டியிருந்த 17 வீடுகளை ஏழைகளுக்கு தானமாகத் தந்தார். இன்னொரு குடும்பம், அரக்குன்னத்தில் 5 வீடுகளுடன் 22 சென்ட் நிலத்தை தானமாக தந்தார்கள். தற்போது பட்டிமட்டத்தில் 1 ஏக்கர் நிலப்பரப்பில் 20 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. கேரளத்தில் வீடற்ற ஏழைப்பிள்ளைகளே இருக்கக் கூடாது என நினைக்கிறேன். அதற்காக இன்னும் வேகமாக ஓட வேண்டும் என நினைக்கிறேன்” என்று சிரிக்கிறார் சிஸ்டர் லிசி. அந்த சிரிப்பில் தெரிகிறது அடுத்த தலைமுறைக்கான நம்பிக்கை.