அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கக் கோரிய வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்


அமைச்சர் செந்தில் பாலாஜி

அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்கக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றி மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் வானதிராயன்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம், உயர் நீதிமன்ற கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில் 'தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர் செந்தில் பாலாஜி. மின்சாரம், கலால் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சராக இருந்தார்.

இந்தநிலையில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. இதனால் செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்துறை, கலால்துறை ஆகியவை வேறு 2 அமைச்சர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.

தற்போது செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. எனவே அவர் அமைச்சர் பதவியில் தொடர தடை விதித்தும், அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியும் உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இதே போன்ற கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் இந்த மனுவும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

x