ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


புதுடெல்லி: ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. கடந்த 2004-ம் ஆண்டு ஜனவரியில் தேசிய ஓய்வூதிய திட்டம் அமல் செய்யப்பட்டது. இதுபுதிய ஓய்வூதிய திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் செய்ய வேண்டும்என்று மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதுதொடர்பாக ஆய்வு செய்ய அப்போதைய நிதித் துறை செயலாளர் சோமநாதன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி சுமார் 100-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தி, மத்திய அரசிடம் அண்மையில் பரிந்துரைகளை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் வரையறுக்கப்பட்டது.

பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து மத்தியஅமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறியதாவது:

வரும் 2025-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல் செய்யப்படும். இதன்மூலம் 23 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பலன் பெறுவார்கள்.

புதிய ஓய்வூதிய திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் தங்களதுஅடிப்படை ஊதியத்தில் 10 சதவீதமும் மத்திய அரசு சார்பில் 14 சதவீத தொகையும் செலுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் அரசு ஊழியர்கள் தங்களதுபங்களிப்பை செலுத்த தேவையில்லை. ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தில் 18.5 சதவீத தொகையை மத்திய அரசே செலுத்தும். இவ்வாறு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டத்தில் இருப்பவர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் இணைய வாய்ப்பு வழங்கப்படும். இந்த திட்டத்தில் இணைய மாநில அரசுகளுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். மாநில அரசுகள் இணைந்தால் உறுப்பினர்களின் எண்ணிக்கை 90 லட்சமாக உயரும்.

ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்களில் 25 ஆண்டுகள் பணி நிறைவுசெய்தவர்களுக்கு அவர்களின் கடைசி ஆண்டு அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக வழங்கப்படும். அவர்கள் உயிரிழந்தால் வாரிசுகளுக்கு குடும்ப ஓய்வூதியம் 60 சதவீதம் வழங்கப்படும். பத்து ஆண்டுகள் பணியாற்றிய மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம் கிடைக்கும். இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

x