பாலியல் துன்புறுத்தல் வழக்குகள்: ஹெச்.டி.ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா மீது குற்றப்பத்திரிகை தாக்கல்


பிரஜ்வல் ரேவண்ணா | கோப்புப்படம்

பெங்களூரு: பாலியல் துன்புறுத்தல் வழக்கில் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சி எம்எல்ஏ ஹெச்.டி. ரேவண்ணா, அவரது மகனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீது சிறப்பு புலனாய்வு குழுவின் (SIT) குற்ற வழக்குகள் விசாரணைத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஹாசன் தொகுதியின் முன்னாள் எம்.பி.யான பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிரான நான்கு வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. அதில் வீட்டு பணிப்பெண் கொடுத்த வழக்கு தொடர்பாக இந்த குற்றப்பத்திரிக்கை, மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுமார் 2,000 பக்கங்கள் கொண்ட எஸ்ஐடி-ன் குற்றப்பத்திரிக்கையில், சுமார் 150 சாட்சியங்களின் வாக்குமூலங்கள் அடங்கியுள்ளன.

இந்தக் குற்றப்பத்திரிகையில், கள ஆய்வு, உயிரியியல், உடல், அறிவியியல் சோதனைகள், மொபைல், டிஜிட்டல் மற்றும் அவைகள் தொடர்பாக ஆதாரங்கள் அடங்கியுள்ளன. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு நிபுணர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டதாக எஸ்ஐடி தெரிவித்துள்ளது.

மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனுமான ஹெச்.டி.ரேவண்ணா மீது, ஐபிசி பிரிவு 354 மற்றும் 354 (ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது 33 வயது மகன் பிரஜ்வல் ரேவண்ணா மீது பிரிவு 376,376 (2)(கே), 354,354(ஏ) மற்றும் 354 (பி) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தந்தை மகன் இருவர் மீதும் அவர்களது வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் கொடுத்த பாலியல் துன்புறுத்தல் புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ரேவண்ணாவின் மனைவி பவானியின் உறவினரான அந்தப் பணிப்பெண் தான் பல முறை பாலியல்துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பிரஜ்வல் ரேவண்ணா என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்திருந்தார். மக்களவைத் தேர்தலின் இரண்டாவது கட்ட வாக்குப்பதிவான ஏப்.26-ம் தேதிக்கு முன்பு பிரஜ்வல் ரேவண்ணாவால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் பல பெண்கள் பாலியல்வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து கர்நாடகா மாநில பெண்கள் ஆணையத்தின் தலைவி நாகலட்சுமி சவுத்தரி விசாரணை நடத்தக்கோரி மாநிலத்தின் காங்கிரஸ் அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

x