முறைகேடாக கடன் வழங்கி நிதி மோசடி: அனில் அம்பானி பங்குச் சந்தையில் ஈடுபட 5 ஆண்டு தடை


மும்பை: அனில் அம்பானி மற்றும் ரிலை யன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகள் உட்பட 24 நிறுவனங்கள் பங்குச்சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு பங்குச் சந்தை ஒழுங்குமுறை வாரியம் (செபி) தடை விதித்துள்ளது.

மேலும், அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதமும், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்த ஒரு நிறுவனத்திலும் இயக்குநராகவோ அல்லது முக்கிய பொறுப்பாளராகவோ இருக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு 6 மாதங்களுக்கு தடையும் ரூ.6 லட்சம் அபராதமும் விதிக்கப்படுள்ளது.

ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் நிதியை முறைகேடாக வேறு நிறுவனங்களுக்கு மாற்றியது கண்டறியப்பட்டதை அடுத்து செபி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதுதொடர்பாக செபி வெளியிட்டுள்ள 222 பக்க அறிக்கையில், “அனில் அம்பானி, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளின் ஆதரவோடு, சொத்துகள், பணப்புழக்கம், வருவாய் எதுவும் இல்லாதநிறுவனங்களுக்கு பல கோடி மதிப்புள்ள கடன்கள் வழங்க அனுமதித்துள்ளார்.

இந்தக் கடன்கள் வழங்கப்பட்ட நிறுவனங்கள் பெரும்பாலும், அனில் அம்பானிக்கு தொடர்புடையவை. அந்த வகையில் கடன் வழங்குவதன் பேரில் அனில் அம்பானியும் ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முக்கிய உயர் அதிகாரிகள் சிலரும் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, மார்ச் 2018-ல் ரூ.59.60 ஆக இருந்த ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு, மார்ச் 2020-ல் ரூ. 0.75 ஆக சரிந்தது. இதனால், அந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த 9 லட்சத்துக்கு அதிகமான முதலீட்டாளர்கள் கடும் இழப்பைச் சந்தித்தனர்” என்று குறிப்பிட்டுள்ளது.

பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டதோடு, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் முன்னாள் முக்கிய அதிகாரிகளான அமித் பாப்னாவுக்கு ரூ.27 கோடியும், ரவீந்திர சுதால்கருக்கு ரூ.26 கோடியும், பிங்கேஷ் ஆர் ஷாவுக்கு ரூ.21 கோடியும் செபி அபராதம் விதித்துள்ளது.

ரிலையன்ஸ் யூனிகார்ன் என்டர்பிரைசஸ், ரிலையன்ஸ் எக்ஸ்சேஞ்ச் நெக்ஸ்ட், ரிலையன்ஸ் கமர்ஷியல் ஃபைனான்ஸ், ரிலையன்ஸ் கிளீன்ஜென், ரிலையன்ஸ் பிசினஸ் பிராட்காஸ்ட் நியூஸ் ஹோல்டிங்ஸ் மற்றும் ரிலையன்ஸ் பிக் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தலா ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

x