திரிபுரா மழை வெள்ளத்தால் 22 பேர் உயிரிழப்பு: 65 ஆயிரம் பேர் முகாம்களில் தஞ்சம்


அகர்தலா: திரிபுராவில் பெய்து வரும் கனமழை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 22 பேர்உயிரிழந்துள்ளனர். வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள திரிபுரா அரசுக்கு ரூ.40 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் இதுவரை மாநிலம் முழுவதும் 17 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2,032 பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அவற்றில் 1,789 இடங்களில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட 65,400 பேர் தங்களது குடியிருப்பு பகுதிகளிலிருந்து பத்திரமாக மீட்கப்பட்டு 450 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா கூறியதாவது: சாந்தீர்பஜார் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். பாதிக்கப்பட்ட மக்களை மீட்க பாடுபடும் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்குப் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: திரிபுராவில் ஏற்பட்ட வெள்ளபாதிப்பிலிருந்து மக்களை பத்திரமாக மீட்கும் பணியில் 11 தேசிய பேரிடர் மீட்புப்படை குழுக்கள், 3 ராணுவ படைப் பிரிவுகள், 4 விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்த படைகள் மாநில அரசுக்கு உதவும். மேலும் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள திரிபுரா அரசுக்கு ரூ.40 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

x