மகாராஷ்டிரா பந்த்-க்கு தடைவிதித்த உயர் நீதிமன்றம் - போராட்டத்தை வாபஸ் பெற்ற சரத் பவார்!


மும்பை: உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கருத்தில் கொண்டு, நாளை நடைபெறுவதாக அறிவித்த மகாராஷ்டிர பந்த் போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி (எஸ்பி) தலைவர் சரத் பவார் வேண்டுகோள் விடுத்தார்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகே 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பத்லாப்பூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் படித்து வந்த நான்கு வயதே நிரம்பிய 2 சிறுமிகளை பள்ளியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. பாலியல் துன்புறுத்தலை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என்றும் அவர் மிரட்டியுள்ளதாக தெரிகிறது. குழந்தைகளின் உடல்நலன் குன்றியதால் விவரமறிந்த பெற்றோர் போலீஸில் புகார் அளித்தனர்.

இதை அறிந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பத்லாப்பூர் ரயில் நிலையத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பலர் ரயில் தண்டவாளத்தில் இறங்கி ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். பத்லாபூரின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டங்களில் 17 போலீஸார், 8 ரயில்வே ஊழியர்கள் காயமடைந்தனர்.

இந்த சூழலில் சிவசேனா( உத்தவ் தாக்கரே), காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்( சரத் பவார்) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் மகா விகாஸ் அகாதி கூட்டணி நாளை மாநிலம் தழுவிய பந்த்-க்கு அழைப்பு விடுத்தது.

ஆனால், எதிர்க்கட்சிகளின் இந்த பந்த் முடிவில் மும்பை உயர் நீதிமன்றம் தலையிட்டு, இந்த பந்த் போராட்டத்துக்கு தடை விதித்தது. மேலும், பந்த் நடத்துவதைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மகாராஷ்டிரா அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் நீதிபதி அமித் போர்கர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் கூறியது.

இதனையடுத்து சரத் பவார், “ மும்பை உயர் நீதிமன்றம் பந்த் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளது. நேரமின்மை காரணமாக உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது. எனவே நீதித்துறையின் உத்தரவைப் பொறுத்து, பந்த் அழைப்பை திரும்பப் பெற வேண்டும்”என்று அவர் கூறினார்.

அதேபோல காங்கிரஸும் தனது பந்த் அழைப்பை வாபஸ் பெற்றுள்ளது. மாநிலத் தலைவர் நானா படோலே, ‘சனிக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை மகாராஷ்டிரா முழுவதும் கட்சித் தொண்டர்கள் போராட்டங்களை நடத்துவார்கள்’ என்று கூறியுள்ளார்.

x