தகுதிபெறாத விமானிகளை கொண்டு விமானம் இயக்கம் - ஏர் இந்தியா நிறுவனத்துக்கு ரூ.90 லட்சம் அபராதம் 


புதுடெல்லி: தகுதி பெறாத விமானிகளைக் கொண்டு விமானத்தை இயக்கியதற்காக டாடா குழுமத்துக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் ரூ.90 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு விதிக்கப்பட்டுள்ள அபராதம் தவிர, ஏர் இந்தியாவின் செயல் இயக்குநர் பன்குல் மாத்தூருக்கு 6 லட்சம் ரூபாய் மற்றும் பயிற்சி இயக்குநர் மணீஷ் வாசவதாவுக்கு 3 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஏர் இந்தியா நிறுவனம் பயிற்சி பெறாத விமானி மூலமாக ஒரு விமானத்தை இயக்கியது. இது பாதுகாப்பு அச்சம் மிகுந்த ஒரு சம்பவமாக கண்டறியப்பட்டது" என்று குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து ஜூலை 10ம் தேதி விமான நிறுவனம் அறிக்கையை சமர்ப்பித்த பிறகு, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் ஏர் இந்தியா விமான நிறுவனத்தை விசாரிக்கத் தொடங்கினார். ஜூலை 22 அன்று வெளியிடப்பட்ட ஷோ காஸ் நோட்டீஸ் மூலம் விமானத்தின் காமாண்டர் மற்றும் அதிகாரிகள் தங்கள் நிலைப்பாட்டை விளக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

விசாரணையின் அடிப்படையில், ஒழுங்குமுறை விதிகளின் குறைபாடுகள் மற்றும் பல விதிமீறல்கள் உள்ளன என்பது தெரியவந்தது என்றும், இதனையடுத்து ஏர் இந்தியா நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

x