பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடை: ரூ.25 கோடி அபராதம்!


புதுடெல்லி: இந்திய பங்கு சந்தையில் வர்த்தகம் செய்ய அனில் அம்பானிக்கு செபி 5 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்திலிருந்து நிதியை தவறாக பயன்படுத்தியதாக அனில் அம்பானி மற்றும் 24 நிறுவனங்கள் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட செபி ஐந்தாண்டுகள் தடை விதித்துள்ளது. மேலும், அனில் அம்பானிக்கு ரூ.25 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட எந்த நிறுவனத்தில் அல்லது பதிவுசெய்யப்பட்ட எந்தவொரு நிறுவனத்திலும் இயக்குநராகவோ அல்லது முக்கிய நிர்வாகப் பொறுப்பிலோ இருப்பதற்கும் அனில் அம்பானிக்கு 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தை பத்திரச் சந்தையில் இருந்து ஆறு மாதங்களுக்குத் தடை செய்தும், ரூ. 6 லட்சம் அபராதம் விதித்தும் செபி உத்தரவிட்டுள்ளது. செபி தனது 222 பக்க இறுதி உத்தரவில், அனில் அம்பானி, ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் சேர்ந்து, அந்த நிறுவனத்திலிருந்து நிதியை அவருடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களுக்கு கடன் என்ற போர்வையில் திருப்ப ஒரு மோசடித் திட்டத்தைத் திட்டமிட்டு செயல்படுத்தினார்.

நூற்றுக்கணக்கான கோடி மதிப்புள்ள கடன்கள் சொத்துக்கள், பணப் புழக்கம் அல்லது வருவாய் இல்லாத நிறுவனங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக செபி குறிப்பிட்டது. இந்தக் கடன்களுக்குப் பின்னால் வேண்டுமென்றே உள்நோக்கம் இருப்பதாகக் கூறுகிறது. இந்தக் கடன் வாங்கியவர்களில் பெரும்பாலோர் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை. இது 9 லட்சத்திற்கும் அதிகமான முதலீட்டாளர்கள் உட்பட பொது பங்குதாரர்களுக்கு கணிசமான இழப்பை ஏற்படுத்தியது.

மார்ச் 2018 ல் ரூ. 59.60 ஆக இருந்த ரிலையன்ஸ் ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்கின் விலை, மோசடி வெளிப்பட்டதால் மார்ச் 2020 க்குள் ரூ 0.75 ஆக சரிந்தது என்பது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் செபியின் விரிவான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

x