> பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்: பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கும் தலைமைத் தேர்தல் ஆணையம் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட இரண்டு கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் தங்களின் பரப்புரையின்போது தேர்தல் நடத்தை விதிகளை கடைபிடிப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.
> “தேர்தல் என்பது அழகு போட்டியில்லை” - ஜூன் 4-ம் தேதி மக்களிடமிருந்து ஆட்சி அமைப்பதற்கான ஆணை கிடைத்த உடன் பிரதமர் யார் என்பது சில மணி நேரங்களுக்குள் முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மேலும் அவர், "தேர்தல் என்பது அழகு மக்களுக்கு இடையேயான அழகுப் போட்டி இல்லை. அதனால் பிரதமர் மோடிக்கு எதிரான பிரதமர் வேட்பாளர் முகம் இண்டியா கூட்டணியில் இல்லை என்று சாடியுள்ளார்.
> பாஜக அரசு மீது டெல்லி அமைச்சர் குற்றச்சாட்டு: தேர்தல் நேரத்தில், டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தி ஆம் ஆத்மி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த பாஜக சதி செய்துள்ளதாக டெல்லி அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
> ஹேமந்த் சோரனுக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனை இடைக்கால ஜாமீனில் விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதையடுத்து, ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை ஹேமந்த் சோரன் திரும்பப் பெற்றார்.
> 400 தொகுதிக்கு மேல் வெற்றி கற்பனையானது: தேசிய ஜனநாயகக் கூட்டணி இம்முறை 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்ற பாஜகவின் முழக்கம் ஒரு முழுமையான கற்பனை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் தெரிவித்துள்ளார்.
> ஆம் ஆத்மி மீது ஸ்வாதி மலிவால் புதிய குற்றச்சாட்டு: ஆம் ஆத்மி கட்சி மீது அக்கட்சியின் மாநிலங்களை உறுப்பினரான ஸ்வாதி மலிவால் புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளார். இன்று அவர் தனது எக்ஸ் பதிவில் கட்சியின் மூத்த தலைவரிடமிருந்து தனக்கு அழைப்பு வந்ததாகவும், தனக்கு எதிராக தவறான விஷயங்களைப் பேச ஒவ்வொருவரும கட்டாயப்படுத்தப்படுவதாகவும், தனிப்பட்ட புகைப்படங்களை கசிய விடுவதாக கட்சி மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
> தென்மேற்கு பருவமழை மே 31-ல் தொடங்கும்: இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, கேரளாவில் வரும் மே 31-ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
> “ஸ்டாலின் முயற்சி வெற்றி பெறாது” - வானதி சீனிவாசன்: ஒடிசாவில் பிரதமர் மோடி பேசியதை திரித்து திசை திருப்பும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் முயற்சி வெற்றி பெறாது என்று பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
> வங்கதேச எம்.பி., கொல்கத்தாவில் மாயம்: வங்கதேசத்தின் ஆளுங்கட்சியான அவாமீ லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மே 12-ம் தேதி இந்தியா வந்த நிலையில், அவர் மே 18-ம் தேதி முதல் கொல்கத்தாவில் காணாமல் போயிருப்பதாக கூறப்படுகிறது.
> பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையில் போர் நீடித்து வரும் நிலையில், அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் நாடுகள் பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் தங்களின் முடிவினை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இதன் விளைவாக இந்த நாடுகளில் உள்ள தங்களின் தூதர்களை இஸ்ரேல் திரும்பப் பெற்றுள்ளது.