திரிபுரா வெள்ளம்: உயிரிழப்பு 22 ஆக அதிகரிப்பு; 65 ஆயிரம் பேர் முகாம்களுக்கு மாற்றம்


அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு பேர் காணாமல் போய் உள்ளனர்.

அஸ்வினி திரிபுரா பாரா மற்றும் சந்திர்பஜாரின் தேபிபூரில் ஏற்பட்ட நிலச்சரில் 10 பேர் மண்ணில் புதையுண்டதாக மாநில முதல்வர் மானிக் சாஹா தனது முகநூல் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "நிலைமை இன்னும் மோசமாகவே உள்ளது. அரசு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று நான் மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். நானும் தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடுவேன்" என்று தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு மாநிலத்தில் தற்போது நீடித்துவரும் நிலைமையால் சுமார் 17 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கனமழையால் வீடுகள் சேதமடைந்ததால் மாநிலத்தில் உள்ள 450 நிவாரண முகாம்களில் 65,400 பேர் தஞ்சமடைந்துள்ளனர். 2,032 இடங்களில் நிலச்சரிவு பதிவாகியுள்ளது. அவைகளில் 1,789 பகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மற்றப் பகுதிகளில் பணிகள் நடந்து வருகின்றன.

கோமதி மற்றும் தெற்கு திரிபுரா மாவட்டங்களில் சிக்கியுள்ள மக்களை வெளியேற்ற மத்திய அரசு இரண்டு ஹெலிகாப்டர்களை வழங்கியுள்ளதாக வருவாய்த்துறை செயலாளர் பிரிஜேஸ் பாண்டே தெரிவித்துள்ளார். இதனிடையே, திரிபுராவில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் மூலம் 334 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளதாக அசாம் ரைபில்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

ஆப்ரேஷன் ஜல் ரஹாத் என்ற பெயரில் அசாம் ரைபில்ஸ் மனிதாபிமான உதவிகள் மற்றும் பேரிடர் மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். அமர்பூர், பிஷால்ஹர் மற்றும் ராம்நகரின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 18வது அசாம் ரைபிசின் இரண்டு பிரிவுகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. இந்தநிலையில் இன்று வெள்ளிக்கிழமை திரிபுராவில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோசமான காலநிலைக் காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

x