மோடிக்காக தயாராகிறதா ராமநாதபுரம்?


பிரதமர் நரேந்திர மோடி

மோடியின் வாராணசிக்கு எத்தகைய முக்கியத்துவத்தை தருகிறார்களோ அதே அளவுக்கான முக்கியத்துவத்தை ராமேஸ்வரத்துக்கும் ராமநாதபுரத்துக்கும் தருகிறார்கள் பாஜக தலைவர்கள். அதனால் தான் எப்படியாவது ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் தாமரையை மலரவைக்க தேர்தலுக்குத் தேர்தல் மெனக்கிடுகிறார்கள்.

தமிழகத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட தங்களுக்காக 9 தொகுதிகளை டிக் செய்து வைத்திருக்கிறது பாஜக. அதில் ராமநாதபுரமும் பிரதானமாக இருக்கிறது. தென் மாநிலங்களில் இந்தத் தேர்தலில் கணிசமான தொகுதிகளை வென்றெடுக்க திட்டமிட்டிருக்கும் பாஜக, அதை சாத்தியமாக்க ராமநாதபுரத்தில் மோடியை நிறுத்தலாம் என்ற பேச்சும் பலமாக அடிபடுகிறது. தென் பகுதியில் மோடி போட்டியிடும் பட்சத்தில் அதன் தாக்கம் பக்கத்து தொகுதிகளிலும் பக்கத்து மாநிலங்களிலும் இருக்கும் என்பதும் இதற்குள் இருக்கும் கணக்காக இருக்கலாம் என்கிறார்கள்.

பிரதமர் மோடி

இந்தத் தொகுதியில் தொடர்ச்சியாக கடந்த 3 தேர்தல்களாக களம் கண்டு வருகிறது பாஜக. ஒருமுறை கூட வெற்றிக்கோட்டை எட்டிப் பிடிக்க முடியவில்லை என்றாலும் தேர்தலுக்குத் தேர்தல் பாஜகவின் வாக்கு வங்கி அதிகரித்துக் கொண்டே வருகிறது. இத்தனைக்கும் இது சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் தொகுதி.

பிரதமர் மோடி

இந்துக்களின் புனிதத்தலமான ராமேஸ்வரத்தை உள்ளடக்கிய ராமநாதபுரம் மக்களவை தொகுதியை தங்கள் வசப்படுத்த வேண்டும் என்பதற்காக அடிமேல் அடி எடுத்து வைத்து வருகிறது பாஜக. 2019-ல் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்ததும், ராமநாதபுரத்தை வளர்ச்சிக்குரிய மாவட்டமாக தேர்வுசெய்த பாஜக அரசு, அதற்கான சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

நீண்ட கால பிரச்சினையான தமிழக மீனவர் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறது மத்திய அரசு. அதற்காக இதுவரை 28 பேருக்கு மானியத்துடன் கூடிய ஆழ்கடல் மீன்பிடி படகுகளை வழங்கியுள்ளது. உள்நாட்டு மீன்வளத்தை பெருக்கும் வகையில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் 5 கோடி இறால் மீன் குஞ்சுகளை கடலில் விடும் திட்டத்தையும் செயல்படுத்தி உள்ளது.

தனுஷ்கோடி அரிச்சல்முனை சாலை

குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண கிராமங்கள் தோறும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு திட்டத்தையும் பெருமளவில் செயல்படுத்து விவசாயிகளின் பார்வையையும் தங்கள் பக்கம் திருப்பி இருக்கிறது பாஜக. உதான் திட்டத்தின் கீழ் உச்சிப்புளியில் பயணிகள் விமான போக்குவரத்து சேவையைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்கள் எல்லாம் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, கபில் மொரேஷ்கா பட்டேல் ஆகியோர் அடிக்கடி அவ்வப்போது ராமநாதபுரத்துக்கு வந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். தொகுதியில் தேர்தல் பணிகளை கவனிக்கும் பொறுப்பை பொன்.ராதாகிருஷ்ணன் வசம் ஒப்படைத்திருக்கிறது பாஜக தலைமை. மொத்தமுள்ள 1,930 வாக்குச் சாவடிகளில் 1,200 சாவடிகளுக்கான பூத் கமிட்டிகளை அமைத்து முடித்துவிட்டது பொன்னார் டீம். தொகுதிக்குள் இப்படி ஜரூராக நடக்கும் மக்கள் நலப் பணிகளையும் தேர்தல் பணிகளையும் வைத்துப் பார்க்கையில், மோடி தான் இங்கே போட்டியிடப் போகிறாரோ என்ற கேள்வியை சாமானியர்கள் மத்தியிலும் எழுப்பிக் கொண்டிருக்கிறது.

புதிதாக கட்டப்பட்டு வரும் பாம்பன் ரயில் பாலம்.

மோடிக்காகத்தான் ராமநாதபுரம் தொகுதி தயாராகிறதா? என்ற கேள்வியுடன் மாவட்ட பாஜக பொறுப்பாளர் கே.முரளிதரனிடம் பேசினோம். ’’ராமாயண தொடர்புடைய ராமேஸ்வரத்தின் மீது பிரதமர் மோடி தனி கவனம் செலுத்திவருகிறார். அதன் வெளிப்பாடாகத்தான் சுமார் 50 ஆண்டுகளாக சாலை வசதியின்றி கிடந்த தனுஷ்கோடிக் ரூ 70 கோடி செலவில் சாலை அமைத்துத் தந்துள்ளார். இதன் மூலம் சாமானிய மக்களும் தனுஷ்கோடிக்கு சென்று ராமர் நீராடிய இடத்தில் தாங்களும் நீராடி மகிழ்கின்றனர்.

அடுத்த கட்டமாக 105 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரம் - தனுஷ்கோடி ரயில் போக்குவரத்து சேவையைத் தொடங்கவும் அனுமதி அளித்துள்ளார். தற்போதைய பாம்பன் ரயில் பாலத்தின் திறனை கருத்தில் கொண்டு புதிய ரயில் பாலம் அமைக்கும் பணிக்கு 525 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டதை விட நவீனமாகவும், இரு வழி பாதையாகவும் இந்த பாலம் கட்டப்பட்டு வருகிறது. இதுபோல ஈனும் ஏராளமான திட்டங்களை ராமநாதபுரத்துக்காக தந்திருக்கிறார் மோடி.

கே.முரளிதரன்

பாஜக ஆட்சியில் பாதுகாப்புடன் வாழ முடியும் என்ற நம்பிக்கை சிறுபான்மை மக்களிடையே ஏற்பட்டுள்ளது. முத்தலாக் தடை சட்டத்தால் பல ஆயிரம் இஸ்லாமிய பெண்கள் மத்தியில் பாஜகவுக்கு நற்பெயர் கிடைத்திருக்கிறது. ஆகவே, ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடுவதற்கு சாதகமான சூழல் உள்ளது. பிரதமர் மோடி இங்கு போட்டியிட வேண்டும் என்பது எங்கள் விருப்பம். அவர் இங்கு போட்டியிட்டால் இந்த தொகுதி கற்பனைக்கு எட்டாத அளவுக்கு வளர்ச்சியடையும்’’ என்றார் அவர்.

ஆத்மா கார்த்தி

ராமநாதபுரம் மக்களவை தொகுதி பாஜக பொறுப்பாளரான ஆத்மா கார்த்தி நம்மிடம் பேசுகையில், ‘’காசிக்கும் ராமேஸ்வரத்துக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அந்த தொடர்பை வெளிக்கொணரும் விதமாக காசி தமிழ் சங்கமம் நிகழ்சியை பிரதமர் நடத்தினார். ராமநாதபுரம் தொகுதியை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் காசி சென்று வர பிரதமர் ஏற்பாடு செய்தார். ராமேஸ்வரம் மீது பிரதமருக்கு உள்ள ஈடுபாட்டின் விளைவாக ராமநாதபுரம் தொகுதி பல வகையிலும் சிறப்படைந்து வருகிறது. ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டி என்ற செய்தி செவிவழிச் செய்தியாக இருந்தாலும் அதுவே எதிர்க்கட்சியினர் மத்தியில் அச்சத்தையும் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

ராமநாதபுரத்தில் மோடியே போட்டியிடட்டும். வாராணசி கண்ட வளர்ச்சியை ராமேஸ்வரமும் ராமநாதபுரமும் காணட்டும்!

x