இனி அடிக்கடி தமிழக விசிட் வருவார் அமித் ஷா!


அமித் ஷா

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டுப் பக்கம் வரத் தொடங்கி இருக்கிறார். அவர் வந்துபோன அடி மறைவதற்குள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது உள்ளிட்ட அதிரடிகள் அரங்கேறத்தொடங்கி விட்டன.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் தாமரையைத் தடம் பதிக்கும் முயற்சியை செவ்வனே செய்துகொண்டு இருக்கிறது பாஜக. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவோ தங்களுக்குள் இருக்கும் பங்காளிச் சண்டைக்கே நேரம் ஒதுக்கமுடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. இதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு தமிழகத்தில் வேகமாக முன்னேறுகிறது பாஜக.

தனது கட்சியை வளர்க்க வேண்டும் என்பதற்காக கூட்டணி தோழனான அதிமுகவையும் அவ்வப்போது போட்டுத் தாக்குகிறார் அண்ணாமலை. ஒருபுறம், அதிமுகவின் தோளில் அமர்ந்துகொண்டே கூடுதல் தொகுதிகள் கேட்டு அந்தக் கட்சியிடம் பேரம் பேசுவது, மறுபுறம் திராவிடத்தை நீர்த்துப் போகச்செய்து தேசியத்தை தமிழகத்தில் படரவிடுவது என இரட்டைக் குதிரை லாபி செய்கிறது பாஜக.

இதனிடையே, தங்களுக்கு செல்வாக்குமிக்க சில தொகுதிகளை தேர்ந்தெடுத்து, அங்கெல்லாம் மத்திய இணை அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டிருக்கிறது பாஜக. ஒன்றரை வருடத்துக்கு முன்பே இந்தப் பணிகளை முன்னெடுத்துவிட்டது பாஜக.

அதிமுகவுக்குள் உட்கட்சிக் குழப்பம், திமுகவுக்கு ரெய்டு பயம் என இரண்டு கட்சிகளின் கவனத்தையும் வேறுபக்கம் திருப்பிவிட்டு சத்தமில்லாமல் தேர்தல் பணிகளை கவனித்து வருகிறது பாஜக. இதுவரை மத்திய இணை அமைச்சர்களை இறக்கிவிட்டு ஆழம்பார்த்த அமித் ஷா, இப்போது அவரே களத்துக்கு வந்திருக்கிறார்.

அண்ணாமலை

இம்முறை தமிழகம் வந்த அமித் ஷா, பாஜக தொகுதிப் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களிடம் “25 தொகுதிகளில் நமது கூட்டணி வெற்றிபெற்றாக வேண்டும்” என்று சொல்லி அனுப்பிய அமித் ஷா, தனிப்பட்ட முறையில் முக்கிய நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில் ஒரு கணக்கைப் பகிர்ந்தாராம். அதுதான் சாதிய கணக்கு!

“கடந்த 9 ஆண்டுகளில் பரவலாக அனைத்து சமுதாய மக்களுக்கும் கட்சியிலும் ஆட்சியிலும் உரிய பிரதிநிதித்துவம் கொடுத்தது பாஜகதான். பாஜக மாநிலத் தலைவராக பட்டிலினத்தைச் சேர்ந்த எல்.முருகனை நியமித்தோம். தொடர்ந்து அவரை மத்திய இணை அமைச்சராகவும் ஆக்கினோம். தமிழர்கள் நேசிக்கும் இளையராஜாவை நியமன எம்பி ஆக்கினோம்.

தென் பகுதியில் நாடார் சமூகத்தைச் சேர்ந்த தமிழிசை செளந்தர்ராஜன், கொங்கு மண்டலத்தில் சி.பி.ராதாகிருஷ்ணன், பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த இல.கணேசன் என மூன்று தமிழர்களை ஆளுநர்கள் ஆக்கியிருக்கிறோம். கொங்கு மண்டலத்தில் கணிசமாக இருக்கும் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த அண்ணாமலை தான் மாநிலத் தலைவராக உள்ளார். இதுவெல்லாம் இவர்கள் சார்ந்த சமூகங்களுக்குள் பாஜகவுக்கு நிச்சயம் ஆதரவை பெருக்கி இருக்கும்” என ஒரு கணக்குச் சொன்னாராம் அமித்ஷா.

மேலும், “நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் ஆதீனங்களை அழைத்து மரியாதை செய்து நாடாளுமன்றத்தில் செங்கோல் வைத்தது தமிழகத்து சைவநெறியாளர்கள், ஆன்மிக அன்பர்கள் மத்தியில் பாஜகவின் இமேஜை இன்னும் உயர்த்தி இருப்பதாக எனக்கு தகவல் வந்திருக்கிறது” என்று சொன்ன அமித் ஷா, “பட்டியல் சமூக தலைவர்களான கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் போன்றவர்கள் பாஜகவுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். அதுபோலவே இன்னும் இருக்கும் சிறு சிறு சமூகங்களின் தலைவர்களையும் நம் பக்கம் திருப்பும் வேலைகளைச் செய்ய வேண்டும்” என்றும் சொன்னாராம்.

மோடி- அமித்ஷா

வேலூர் கூட்டத்தில், “எதிர்காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர் பிரதமராக வருவார்” என்று தமிழர்களை அங்கீகரிக்கும் விதமாகப் பேசிய அமித் ஷா, இதற்கு முன்பு அத்தகைய வாய்ப்பு அமைந்தும் அதை தடுத்துவிட்டார்கள்” என திமுக மீதும் அஸ்திரம் வீசி இருக்கிறார்.

கர்நாடகத்தில் ஆட்சியைப் பறிகொடுத்த நிலையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் எம்பி-க்களைப் பெறவேண்டிய கட்டாயம் பாஜகவுக்கு இருக்கிறது. அதற்கு தோதான பார்ட்னராக அதிமுகவும் இருப்பதால் மற்ற மாநிலங்களை விட்டுவிட்டு தெற்கில் முதல் மாநிலமாக தமிழகத்தில் கால் பதித்திருக்கிறார் அமித் ஷா.

அமித் ஷா தேர்தல் வியூகம் வகுப்பதில் கில்லாடி தான் என்றாலும் தமிழகத்தில் அவரது சாணக்கியத்தனம் எடுபடுமா என்பது சந்தேகமே. எனென்றால், கன்னியாகுமரி தொகுதி இடைத் தேர்தலில் பொன்.ராதாகிருஷ்ணனின் வெற்றிக்காக எவ்வளவோ மெனக்கிட்டார் அமித் ஷா. ஆனால், அங்கே அதெல்லாம் எடுபடவில்லை.

இராம. ஸ்ரீனிவாசன்

அமித் ஷாவின் தமிழகம் வருகை மக்களவைத் தேர்தல் பணிகளுக்கான ஒத்திகையா என்ற கேள்வியுடன் பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசனிடம் பேசினோம்.

“தமிழகத்தில் எங்களுக்கு ஏற்கெனவே செல்வாக்கு உள்ள தொகுதிகள், நாங்கள் போட்டியிட்ட தொகுதிகள் என 10 தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து களப்பணி செய்து வருகிறோம். அங்கெல்லாம் அமைப்பை பலப்படுத்தி வருகிறோம். நாங்கள் தேர்வு செய்த தொகுதிகளில் தேர்தல் பணிகளை செய்து வந்தாலும் கூட்டணி உள்ளிட்டவை முடிவான பின்புதான் அதன் இறுதி வடிவம் கிடைக்கும்.

எங்கள் வேலையின் ஒரு அங்கமாகத்தான் தென் சென்னை, வேலூர் மக்களவைத் தொகுதிகளைக் கணக்கு வைத்து அமைச்சர் அமித் ஷா வந்தார். அமித் ஷா மட்டும் அல்லாது அவருடன் கிஷன் ரெட்டி, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டவர்களும் வந்தார்கள். ஆனால், வழக்கமான எங்கள் கட்சிப் பணிக்காக வந்த அமித் ஷாவின் வருகையை அரசியலாக்கிப் பார்ப்பது திமுகதான். பாஜகவை பொறுத்தவரை எப்போதுமே தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பே அமைப்புப் பணிகளை ஆரம்பித்துவிடுவது வழக்கமான விஷயம் தான். இது புரியாமல் அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் திமுக இப்போது அலறிக் கிடக்கிறது” என்றார் அவர்.

இம்முறை தென் மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான எம்பி-க்களை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது பாஜக. அந்த வகையில் அமித் ஷா வருகையை தமிழகம் இனி அடிக்கடி எதிர்பார்க்கலாம்!

x