'குமாரசாமியை கைது செய்ய ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் போதும்' - சித்தராமையா கிண்டல்


பெங்களூரு: மத்திய அமைச்சரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமியை கைது செய்ய ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் மட்டுமே போதும் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

சட்டவிரோத நிலச் சுரங்க வழக்கில் மத்திய அமைச்சர் குமாரசாமியை விசாரிக்க கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டின் அனுமதியை கர்நாடக லோக் ஆயுக்தாவின் சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) கோரியுள்ளது. இதனையடுத்து குமாரசாமி இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவை கடுமையாக விமர்சித்தார். அவர், "என்னை கைது செய்ய நூறு சித்தராமையாக்கள் வரவேண்டும். என்னைப் பார்த்தால் பயப்படுபவர் போல இருக்கிறதா?" என்று தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்துள்ள சித்தராமையா, "குமாரசாமியை கைது செய்ய 100 சித்தராமையாக்கள் இல்லை, ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் போதும். 100 சித்தராமையாக்கள் வந்தாலும் அவரை கைது செய்ய முடியாது. ஏனென்றால் நான் கைது செய்யப் போவதில்லை, காவல்துறைதான் கைது செய்யும். அவர் பயப்படவில்லை என்றால், அவர் இன்று செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருக்க மாட்டார்" என்று கூறினார்.

முன்னதாக, கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை மைசூரு மேம்பாட்டு கழகம் (எம்யுடிஏ) கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக அவருக்கு 14 வீட்டு மனைகளை ஒதுக்கியது. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, இந்த நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆளுநர் தாவர்சந்த் கெலாட், சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க அனுமதியளித்தார். இந்த விவகாரம் சித்தராமையாவுக்கு சிக்கலை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

x