புதுடெல்லி: தேர்தல் சமயத்தில், டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தி ஆம் ஆத்மி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த பாஜக சதி செய்துள்ளதாக அமைச்சரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி, “மே 25-ம் தேதி டெல்லியில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி அரசை குறிவைத்து டெல்லி மக்களுக்கு பாஜக தொல்லை கொடுக்கும் சதியில் ஈடுபட்டுள்ளது. டெல்லியில் யமுனை ஆற்றின் நீர் மட்டம் முதன்முறையாக 671 அடிக்கும் கீழாக குறைந்துள்ளது. தற்போது யமுனாவின் நீர் மட்டம் 670.9 அடியாக உள்ளது. ஹரியானாவில் உள்ள பாஜக அரசு, டெல்லிக்கு செல்லும் நீரை தடுத்து நிறுத்தியுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்த சதி அம்பலமாகி உள்ளது. ஹரியானா அரசு மூலமாக பாஜக இந்த சதியில் ஈடுபட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி அரசு உடனடியாக ஹரியானா அரசுக்கு கடிதம் எழுதும். எங்கள் கடிதத்தின் மீது ஹரியானா அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகுவோம்.
டெல்லியில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஆம் ஆத்மி அரசு எடுத்துள்ளது. லாரி மூலமாக தண்ணீர் விநியோகிக்கும் அளவை 24 மணி நேரத்துக்குள் உயர்த்த டெல்லி நீர் வாரிய தலைமை செயல் அதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. போர்வெல் செயல்படும் நேரத்தை 16 மணி நேரத்தில் இருந்து 22 மணி நேரமாக உயர்த்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பாஜகவின் இந்த சதி குறித்து கவலைப்பட வேண்டாம் என டெல்லி மக்களை நான் கேட்டுக்கொள்கிறேன். டெல்லி மக்களை பாஜக முட்டாளாக்க முடியாது. டெல்லியின் மொத்தமுள்ள 7 மக்களவைத் தொகுதிகளையும் டெல்லி மக்கள் இம்முறை இண்டியா கூட்டணிக்கு வழங்க உள்ளார்கள்” என தெரிவித்துள்ளார்.