குஜராத்தில் உள்ள ‘ஆசியாவின் பணக்கார கிராமம்’ - 17 வங்கிக் கிளைகள்; ரூ.7,000 கோடி பிக்ஸட் டெபாசிட்!


கட்ச்: குஜராத்தின் மதாபர் கிராமத்தில் வசிப்பவர்கள், அக்கிராமத்தில் உள்ள வங்கிகளில் ரூ. 7,000 கோடி வைப்புத்தொகை (பிக்ஸட் டெபாசிட்) வைத்துள்ளனர். இந்த கிராமத்தில் 17 வங்கிகளின் கிளைகள் உள்ளன. இந்த கிராமம் ஆசியாவின் பணக்கார கிராமமாக அறியப்படுகிறது.

குஜராத் இந்தியாவின் தலைசிறந்த தொழிலதிபர்களை உருவாக்கியுள்ளது. அம்மாநிலத்தின் செழிப்பு என்பது நகரங்களுடன் நின்றுவிடவில்லை, கிராமங்களுக்கும் பரவியுள்ளது. கட்ச் பகுதியிலுள்ள மதாபர் கிராமம் 'ஆசியாவின் பணக்கார கிராமம்' என்று சொல்லப்படுகிறது.

புஜின் புறநகரில் உள்ள இந்த மதாபர் கிராமத்தில் வசிப்பவர்கள் ரூ 7,000 கோடி மதிப்புள்ள வைப்பு தொகையை வங்கிகளில் வைத்திருக்கிறார்கள். மதாபரில் படேல் சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். அந்த கிராமத்தின் மக்கள்தொகை சுமார் 32,000 என மதிப்பிடப்பட்டுள்ளது, இது 2011ல் 17,000 ஆக இருந்தது. மதாபர் கிராமத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கி, எஸ்பிஐ, பிஎன்பி, ஆக்சிஸ், ஐசிஐசிஐ மற்றும் யூனியன் வங்கி உட்பட 17 பொது மற்றும் தனியார் வங்கிகளின் கிளைகள் உள்ளன. மேலும், பல வங்கிகள் தங்கள் கிளைகளை இங்கு திறக்க ஆர்வமாக உள்ளன.

இக்கிராமத்தின் செழிப்புக்கு காரணம் அதன் என்ஆர்ஐ (வெளிநாடு வாழ் இந்தியர்) குடும்பங்கள். அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பல கோடிகளை டெபாசிட் செய்கிறார்கள். மதாபர் கிராமத்தில் கிட்டத்தட்ட 20,000 வீடுகள் உள்ளன, ஆனால் அதில் சுமார் 1,200 குடும்பங்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றன. இவர்களில் பெரும்பாலும் ஆப்பிரிக்க நாடுகளில் வசிக்கின்றனர்.

மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள கட்டுமானத் தொழில்களில் குஜராத்திகள் பெரிதும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மேலும் பலர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் நியூசிலாந்திலும் வாழ்கின்றனர். பல கிராமவாசிகள் வெளிநாட்டில் வாழ்ந்து வேலை செய்தாலும், அவர்கள் வசிக்கும் இடத்தை விட சொந்த கிராமத்தில் உள்ள வங்கிகளில் பணத்தை சேமித்து வைத்துள்ளனர். இதனால்தான் இந்த கிராமம் ஆசியாவில் பணக்கார கிராமமாக உள்ளது.

x