திண்டுக்கல் மாவட்டம் பழநி பகுதியில் கூலி ஆட்கள் பற்றாக்குறைக் காரணமாக இயந்திரம் மூலம் கரும்பு அறுவடையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
பழநி கணக்கன்பட்டி, கோம்பைபட்டி, நெய்க்காரப்பட்டி, பாப்பம்பட்டி பகுதிகளில் அதிக அளவில் கரும்பு சாகுபடியாகிறது. அதனைப் பயன்படுத்தி வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் நெய்க்காரப்பட்டியில் அதிகளவில் இயங்குகின்றன. ஆனால், கரும்பு அறுவடை செய்ய போதுமான கூலியாட்கள் கிடைப்பதில்லை. கூலியும் உயர்ந்து கொண்டே போகிறது. அறுவடைக்கு கூலியாட்கள் கிடைக்கும் வரை காத்திருக்கும் வேண்டிய நிலை ஏற்படுகிறது.
அதனால் பழநி கோம்பைபட்டி பகுதியில் இயந்திரம் மூலம் கரும்பு அறுவடையில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கூலியாட்களை பயன்படுத்துவதை விட, இயந்திரத்தை பயன்படுத்துவதில் வாடகை குறைவாகும். இதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்பதால் விவசாயிகள் இயந்திரம் மூலம் அறுவடையை தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து கோம்பைபட்டி விவசாயிகள் கூறுகையில், " கரும்பு அறுவடைக்கு கூலியாட்கள் ஊதியமாக ரூ.1,200 வரை கேட்கின்றனர். ஒரு நாள் முழுவதும் வேலை பார்க்கின்றனர். ஆனால், இயந்திரம் மூலம் அறுவடை செய்ய ஒரு டன்னுக்கு ரூ.800 தான் செலவாகிறது. வேலையும் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் முடிந்து விடுகிறது. அறுவடை இயந்திரம் கரும்பு சோகை, சருகுகளை உரித்து, கரும்பை துண்டு துண்டாக வெட்டி விடுகிறது. ஆலைகளுக்கு கொண்டு செல்லவும் எளிதாக இருக்கிறது. வேலைப்பளுவும், பணமும் மிச்சமாகிறது" என்றனர்.