நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்: திருவனந்தபுரத்தில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!


திருவனந்தபுரம்: மும்பையில் இருந்து திருவனந்தபுரம் வந்த ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை விமான நிலையத்திலிருந்து, ஏஐ 657 என்ற ஏர் இந்தியா பயணிகள் விமானம் அதிகாலை 5.45 மணிக்கு, மும்பையிலிருந்து புறப்பட்டது. விமானம் திருவனந்தபுரம் விமான நிலையத்தை நெருங்கிய நிலையில் காலை 7.30 மணியளவில் விமானிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து, விமானியின் எச்சரிக்கையை தொடர்ந்து காலை 7.36 மணிக்கு விமான நிலையத்தில் முழு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், காலை 8 மணியளவில் 135 பயணிகளுடன் அந்த விமானம், விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. மேலும், தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் அந்த விமானம் நிறுத்தப்பட்டு சோதனைகள் தொடங்கின. உடனடியாக காலை 8.44 மணியளவில் விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் காரணமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், விமான நிலைய செயல்பாடுகள் தற்போது தடையின்றி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். மேலும், இந்த வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

x