தனிக்கட்சி தொடங்குகிறார் சம்பாய் சோரன்: ஹேமந்த் சோரனுக்கு நெருக்கடி; ஜார்க்கண்ட்டில் பரபரப்பு!


ராஞ்சி: ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் வெடித்துள்ள கிளர்ச்சியை தொடர்ந்து, புதிய அரசியல் கட்சியைத் தொடங்கும் தனது முடிவை ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சம்பாய் சோரன், "ஓய்வு, கட்சி அல்லது கூட்டணி ஆகிய மூன்று விருப்பங்களை நான் குறிப்பிட்டிருந்தேன். நான் ஓய்வு பெறமாட்டேன். புதிய கட்சியை பலப்படுத்துவேன். வழியில் ஒரு நல்ல நண்பரை சந்தித்தால், அவர்களுடன் இணைந்து செயல்படுவேன்” என்று கூறினார். இதன் மூலமாக எதிர்காலத்தில் அவர் பாஜகவுடனான கூட்டணி வாய்ப்பை திறந்து வைத்துள்ளார் என சொல்லப்படுகிறது.

மாநிலத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்க முடியுமா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, "அது உங்கள் பிரச்சனை இல்லை. ஒரு நாளைக்கு 30,000-40,000 தொண்டர்கள் என்னிடம் வரமுடியும் போது, ​​ஒரு புதிய அரசியல் கட்சி அமைப்பதில் எனக்கு என்ன பிரச்சனை. ஒரு வாரத்திற்குள் கட்சி உருவாக்கப்படும்” என அவர் தெரிவித்தார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரும், அம்மாநில முதல்வருமான ஹேமந்த் சோரன் பண மோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததால், ஜார்க்கண்ட் முக்தி மோர்சா கட்சியைச் சேர்ந்த சம்பாய் சோரன் புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, கடந்த ஜூலையில் சம்பாய் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்ததால் சம்பாய் சோரன் கடந்த சில நாட்களாக அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

சில நாட்களுக்கு முன்பு, சம்பாய் சோரன் ஜேஎம்எம் தலைமையின் மீதான தனது அதிருப்தியை சுட்டிக்காட்டினார். அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட விரிவான அறிக்கையில், “முதலமைச்சராக இருந்தபோது நான் அவமானப்படுத்தப்பட்டேன். ஜூலை 3ம் தேதி முதலமைச்சராக நான் கலந்துகொள்ளவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் கட்சி தலைமையால் ரத்து செய்யப்பட்டது.

காரணத்தை கேட்டபோது ‘கட்சி எம்.எல்.ஏக்கள் பங்கேற்கும் கூட்டம் நடைபெறும் வரை எந்த அரசு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள முடியாது’ என்றனர். ஒரு முதல்வரின் நிகழ்ச்சி வேறு ஒரு நபரால் ரத்து செய்யப்படுவதை விட அவமானகரமானது ஏதேனும் இருக்கமுடியுமா?. பதவிக்கு பேராசை இல்லாததால் தான் அமைதி காத்தேன். ஆனால் எனது சுயமரியாதையை காயப்படுத்தப்பட்டது. இவ்வளவு அவமானங்களுக்குப் பிறகு, நான் மாற்று வழியைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது" என்று சம்பாய் சோரன் தனது பதிவில் தெரிவித்திருந்தார்.

பாரதிய ஜனதா கட்சியில் சம்பாய் சோரன் இணைவதற்கான ஊகங்கள் நிலவிய நிலையில், அவர் ஞாயிற்றுக்கிழமை டெல்லி சென்றார். ஆனாலும், அவர் பாஜகவில் இணையவில்லை. இந்த நிலையில், ஜார்க்கண்ட் பாஜக தலைவர் பாபுலால் மராண்டி, “சம்பாய் சோரனுடன் இன்னும் பேச்சு வார்த்தை நடத்தப்படவில்லை. அவர் ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி மற்றும் தனி ஜார்கண்ட் இயக்கத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். அவரே தனது பாதையை தீர்மானிப்பார்" என்று கூறினார்.

x